தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று அதிவேகமாக பரவிவருகிறது. இந்த பரவலைத் தடுக்க ஐந்து முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கரோனா நோய் தொற்று பரவல் குறையவில்லை. ஆகவே, தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்காத மக்களுக்கு அதிக அளவில் அபதாரம் விதிக்க வேண்டும்.
கரோனா நோய்தொற்று ஆராய்ச்சி நிலையங்களை அதிகரிக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைப்பிடிப்பது போன்ற நடைமுறைகளை பின்பற்ற முழுமையான உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு இன்று (அக்.,7) விசாரணைக்கு வந்தது. அதில், மனுதாரர் தரப்பில் தற்போது ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாக், பொது வெளிகளில் தகுந்த இடைவெளியை மக்கள் பின்பற்றுவதில்லை. ஆட்டோ, பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் அதிகமான அளவில் மக்கள் பாதுகாப்பில்லாத வகையில் பயணிக்கின்றனர் எனத் தெரிவித்தார்.