தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கணினி உற்பத்தியில் இந்தியா இறங்கினால் அத்துறையில் மறுமலர்ச்சி ஏற்படும் - விற்பனையாளர்கள் கருத்து

மதுரை: தற்போதைய கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கணினித்துறையின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது? அத்துறை சரியான திசையை நோக்கி நகர்கின்றதா? மக்களின் ஆதரவு எப்படி உள்ளது? என்பது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் துறைசார் நபர்களிடம் கள ஆய்வு மேற்கொண்டது.

கணினி உற்பத்தியில் இந்தியா இறங்கினால் அத்துறையில் மறுமலர்ச்சி ஏற்படும் -  விற்பனையாளர்கள் கருத்து
கணினி உற்பத்தியில் இந்தியா இறங்கினால் அத்துறையில் மறுமலர்ச்சி ஏற்படும் - விற்பனையாளர்கள் கருத்து

By

Published : Nov 24, 2020, 5:41 PM IST

Updated : Nov 25, 2020, 9:47 PM IST

கடந்த 25 ஆண்டுகள் இந்தியாவைப் பொறுத்தவரை, கணினி மறுமலர்ச்சிக் காலம் என்றே சொல்லலாம். அந்தளவிற்கு இங்கு கணினி விற்பனையில் பெரும் புரட்சியே நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கணினி இல்லாத வீடுகளைப் பார்ப்பது அரிதிலும் அரிதாக மாறிவிட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவால் பள்ளி மாணவ, மாணவியருக்காக தொடங்கப்பட்ட மடிக்கணினி வழங்கும் திட்டம் கல்வியில் பெரும் மாற்றத்தையே நிகழ்த்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். டெஸ்க் டாப், லேப் டாப், டேப் லெட் எனக் கணினி புதிய புதிய அவதாரம் எடுத்து வந்தாலும், லேப் டாப் எனப்படுகின்ற மடிக்கணினி பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் முகக்கவசம், சமூக இடைவெளி என ஒட்டு மொத்த இந்தியாவே திண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில், கணினித்துறையின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது? அத்துறை சரியான திசையை நோக்கி நகர்கின்றதா? மக்களின் ஆதரவு எப்படி உள்ளது? என்பது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் வல்லுநர்களிடம் கள ஆய்வு மேற்கொண்டது.

இதுகுறித்து பேசிய மதுரை கணினி விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் செந்தில், 'கடந்த ஐந்தாண்டுகளாக டெஸ்க் டாப் கணினிகளின் விற்பனைத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்தாலும், மடிக்கணினியின் விற்பனை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இந்தத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வீட்டிலிருந்து பணி, இணைய வழிக் கல்வி என அறிவிக்கப்பட்டதால், அபரிவிதமான வளர்ச்சியை கணினித்துறை அடைந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனை மந்தமாக இருந்த நிலையில், அதற்குப் பிறகு வேகமெடுத்தது. எங்களைப் போன்ற நேரடி விற்பனையாளர்களுக்கு மட்டுமன்றி, ஆன்லைன் நிறுவனங்களும்கூட பெருமளவு வளர்ச்சியை எட்டின' என்கிறார்.

மதுரையில் கடந்த 1989ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கணினி விற்பனையாளர்கள் சங்கம் தொடக்கத்தில் வெறும் 20 உறுப்பினர்களோடுதான் நடைபோடத் தொடங்கியது. தற்போது 120 நிறுவனங்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது சந்தையில் உள்ள முக்கிய நிறுவனங்களின் முகவர்களாகவும், விற்பனையகங்களாகவும் உறுப்பினர்கள் செயல்படுகின்றனர்.

அதே அமைப்பின் பொருளாளராக உள்ள பொன்மணி கூறுகையில், 'முதல்கட்ட ஊரடங்கு நிறைவுற்ற நேரத்தில் எங்களது விற்பனை மிக அதிகமாக இருந்தது. அச்சமயம் வாடிக்கையாளர்களின் தேவைக்கு எங்களால் ஈடுகொடுக்க முடியாத நிலை இருந்தது. டி1, டி2 மற்றும் டி3 என மூன்று நிலையில் கணினி விற்பனை நிறுவனங்கள் உள்ளன. ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யும் நிறுவனங்களால் டி3-யில் உள்ள விற்பனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நிலை உள்ளது. கணினி சார்ந்த முக்கியப் பொருட்களின் இருப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. தேவையானவற்றை பெறுவதற்கு இயலாத நிலை உள்ளது. முதலில் வணிக நோக்கங்களுக்காக கணினி வாங்கிய சூழல் குறைந்து, தற்போது அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரித் தேவைகளுக்காக வாங்கும் நிலை உருவாகியுள்ளது.

ஆன்லைன் நிறுவனங்கள் மிகுந்த செல்வாக்குப் பெறுகின்ற காரணத்தால், கணினி விற்பனையில் ஈடுபட்டுள்ள எங்களைப் போன்ற சிறு நிறுவனங்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை உள்ளது' என்கிறார்.

'கணினி உற்பத்தியில் இந்தியா இறங்கினால் அத்துறையில் மறுமலர்ச்சி ஏற்படும்’

மேலும் இவர்கள், கணினி உற்பத்தித் துறையில் இந்திய நிறுவனங்களின் ஈடுபாடு இல்லாததன் விளைவை பல்வேறு நேரங்களில் தங்களால் உணர முடிகிறது என்றும்; தற்போதைய சூழலில் சீனா, தைவான், கொரிய நிறுவனங்களே அதிகமாகத் தாக்கம் ஏற்படுத்துகின்றன. இதன்காரணமாக, உள்ளூர் உற்பத்தியே இல்லாத நிலை உள்ளது என்றும்; இதற்கு இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வது காலத்தின் கட்டாயம் என்றும் கணினி விற்பனையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் பொன்மணி கூறுகிறார்.

அதேபோன்று தற்போது இணையவழிக் கல்வி முறையில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சியின் காரணமாக, பாமர மக்களுக்கும் கணினியைக் கையாளும் வழிமுறைகளை, தொழில் நுட்பங்களை வளர்த்தெடுப்பது மிகவும் அவசியம். அப்போதுதான் அதன் பயன்பாடு அடித்தட்டுமக்கள் வரை செல்லும் எனவும் கணினிசார் விற்பனையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க: அனுமதி பெறாத வாடகை கார் சேவைக்கு கடிவாளம் போடுமா தமிழ்நாடு அரசு?

Last Updated : Nov 25, 2020, 9:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details