மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் ரேவதிக்காக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது,
தெலுங்கர்கள் எல்லாம் திமுகவிற்கு ஓட்டுப் போட சொல்லுகிறார்கள். எனவே நாங்கள் தமிழர்கள் எல்லாம் நாம் தமிழருக்கு வாக்களிக்க கூறுகின்ற எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என கூறுகிறோம். பிற மாநிலங்களில் அரசு வேலைகளில் 80 முதல் 90 விழுக்காடு வரை அந்தந்த மாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. எனவே தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலையை குறைந்தபட்சம் 20 விழுக்காடு தமிழ் இளையஞர்களுக்கு கொடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்துகிறது. ஆனால் தென்னக இரயில்வே துறையில் நம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் வடமாநிலத்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை பயன்படுத்தி திமுக ஆட்சிக்கு வந்தது. கேரளாவில் 15 ஆண்டுகள் குடியிருந்தால்தான் அவர்களுக்கு குடும்ப அட்டை, ஓட்டுரிமை உள்ளிட்ட அனைத்தும் கொடுக்கப்படும், ஆனால் தமிழகத்தில் மட்டுமே வந்த ஒரு மாதத்தில் அனைத்து அட்டைகளையும் பணம் கொடுத்து வங்கி விடலாம். நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கல்லூரி பிள்ளைகள் தாங்கள் வாக்களித்தது மட்டுமல்லாமல் தங்களது பொற்றோர்களையும் ஓட்டு போட வைத்தனர். முன்பு பெற்றோர்கள் கூறும் கட்சிக்கு பிள்ளைகள் வாக்களித்து வந்தனர். ஆனால் தற்போது பிள்ளைகள் சொல்லும் கட்சிக்கு பெற்றோர்கள் வாக்களிக்கும் நிலை வந்துள்ளது.
பரப்புரை மேற்கொண்ட சீமான் சையத் சுஜா என்ற இணைய வல்லுநர் கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்து தான் வெற்றி பெற்றதாக கூறிய குற்றச்சாட்டுக்கு பாஜக தலைவர் எவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. தற்போது மீண்டும் 3 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய திட்டம் தீட்டி வருகின்றனர். அப்போதுதான் அவர்களால் ஆட்சியை தக்க வைக்க முடியும். ஆனால் மத்தியில் பாஜக ஆட்சியிழந்தால் அதிமுகவின் ஈபிஎஸ் ஓபிஎஸ் ஆட்சி 10 நாட்களில் காலியாகி விடும் என்று அவர் தெரிவித்தார்.