மதுரை அழகர் கோயில் பிரதான சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சரும், முன்னாள் ராணுவத் தளபதியுமான வி.கே.சிங் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ’கரோனா பாதிப்பு உள்ள சூழலிலிருந்து மீட்கும் விதமாக இந்தாண்டு பட்ஜெட் அமைந்துள்ளது. கரோனா பாதிப்புள்ள காலகட்டத்தில் சுகாதாரம், தொழில் கட்டமைப்பு, பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆறு கட்டங்களாக பிரிக்கப்பட்டு மக்கள் நலனுக்காகவே பட்ஜெட் கொண்டு வரப்பட்டுள்ளது.
அனைத்து துறைகளுக்கும் நிதி குறிப்பிடத்தக்க வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவங்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. சாலை விரிவாக்க பணிகளுக்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாலை வசதி மேம்படுத்தப்பட்டு மக்களின் பயண நேரம் குறைக்க வழிவகை ஏற்படும். தொழில் நிறுவனங்கள் பொருட்களை விரைவாக கொண்டு செல்ல வசதி.
டெல்லியில் இருந்து மும்பைக்கு 12 மணி நேரத்தில் செல்லும் அளவுக்கு சாலை வசதிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆவாஸ் யோஜனா திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவுள்ளது. சமையல் எரிவாயு 8 கோடி பேருக்கு கொடுக்கபட்டுள்ளது. இதை 10 கோடியாக மத்திய அரசு அதிகரிக்க உள்ளது.
பெண்கள் முன்னேற்றத்துக்கான பட்ஜெட்
பெண்கள் அனைத்துத் துறைகளிலும் வேலை செய்யலாம். இரவு நேரங்களிலும் செய்யலாம் என குறிப்பிட்டு பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் முக்கியத்துவம் வகிக்கின்றனர். பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்ற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பட்ஜெட்டில் ஏழை எளிய மக்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. பட்ஜெட்டில் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 35,000 கோடி ரூபாய் கரோனா தடுப்பு மருந்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.