மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "திருமங்கலத்தில் துணைக்கோள் நகரம் மிக விரைவில் அமையும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. திருமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு, தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை என்று எம்.பி. மாணிக்தாகூரின் குற்றச்சாட்டு மிகத்தவறானது. அடிப்படை விஷயங்கள் தெரிந்த பின்புதான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பேசவேண்டும். ரயில்வே துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி நகரின் முக்கிய பகுதி என்பதால் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துவிட்டு அதற்குப் பிறகு இந்தப் பணிகளை தொடங்க பேசி வருகிறோம். மிக விரைவில் அந்தப் பணி சீராக முடியும் என்பதில் மாற்றமில்லை" என்று உறுதியளித்தார்.