மதுரை: சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசிய அவர், தேவரின் தங்க கவசத்தைப் பொறுத்தமட்டில் அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது நீதிமன்றம் கருத்தின் அடிப்படையில் நாங்கள் முடிவெடுப்போம்.
ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சிலர் நீதிமன்றத்திற்குப் போவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இந்த வழக்கு முடிவு பெறுகின்ற வரையில் நான் கருத்து கூற விரும்பவில்லை என்றார்.
திமுகவின் பீ டீம் என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, ஆரம்பத்திலிருந்து அவருடைய நடவடிக்கை என்ன என்பதை நீங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். யார் மீது குற்றம் என்பதைத் தமிழக மக்கள் நன்றாகக் கணித்து வைத்திருக்கிறார்கள். நேற்று கூட அவர் பொதுவாக நான் சட்டமன்றத்தில் அரை மணி நேரம் முதல்வரைச் சந்தித்துப் பேசியதாகச் சொல்லி இருக்கிறார்.
அது முற்றிலும் தவறானது உண்மைக்குப் புறம்பானது. முதல்வரை நான் சந்தித்ததை அவர் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் நிரூபிக்கவில்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி அரசியலை விட்டு விலகத் தயாரா எனக் கேள்வி எழுப்பினார்.