மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகள் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு பொது முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் வாழ்கின்ற பல்வேறு ஏழை எளிய அடித்தட்டு மக்கள் அத்தியாவசிய பொருள்களுக்காக பெரும் இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர்.
சலூன் கடைக்காரரின் மனித நேயம் இதுபோன்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒன்றான அண்ணா நகர் அருகேயுள்ள மேலமடை பகுதியில் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களே நிறைந்து வாழ்கின்றனர். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அவர்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மேலமடை பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வரும் மோகன் என்பவர் ஏழைக் கூலி தொழிலாளர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்ய முடிவெடுத்து தனது குழந்தையின் எதிர்காலத்திற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை மொத்தமாக எடுத்து, மேலமடை பகுதியில் வாழும் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை மதுரை மாநகர காவல் துறை உதவி ஆணையர் லில்லி கிரேஸ் மூலமாக வழங்கியுள்ளார்.
மேலும் தனது பெண் குழந்தையின் எதிர்காலத்திற்காக சேமித்து வைத்திருந்த தொகையை கரோனா நிவாரணத்திற்காக பயன்படுத்திய சலூன் கடை உரிமையாளர் மோகனை அப்பகுதி மக்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: சொந்த ஊருக்குச் செல்லும் வடமாநிலத்தவர்கள்