மதுரை:மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன், மதுரை ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் இன்று (ஜன.3) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் 2 லட்சத்து 65 ஆயிரத்திற்கும் அதிகமாக பாஸ்போர்ட் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மதுரை பாஸ்போர்ட் அலுவலகம், தென்தமிழ்நாட்டிலுள்ள 10 மாவட்ட விண்ணப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் சேவைகளை வழங்கி வருகிறது.
மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ், மதுரை மற்றும் திருநெல்வேலியிலுள்ள பாஸ்போர்ட் சேவை மையங்கள் மேலும் 8 தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்களின் வழியாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை சமர்ப்பித்தவுடன், காவல்துறை அறிக்கை வேண்டி இணையதளத்தின் மூலமாக அந்தந்த விண்ணப்பதாரரின் முகவரியின் கீழ் அமைந்துள்ள காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. காவல்துறை அறிக்கையானது, மாவட்ட ஆணையர் அல்லது கண்காணிப்பாளர் அலுவலகத்தின் மூலம் இணையதளத்தின் வழியாக, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
பாஸ்போர்ட் பெற தடையின்மை அனுப்பி, அதன் சான்று இணையதளத்தின் வாயிலாக பெறப்பட்டவுடன், வரிசைப்படி பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு விரைவு அஞ்சல் (ஸ்பீடு போஸ்ட்) மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. தினந்தோறும் ஆயிரத்து 500 விண்ணப்பதாரர்கள், அவர்களது விண்ணப்பத்தினை பாஸ்போர்ட் சேவை மையங்களில் சமர்ப்பித்து வருகின்றனர்.
5-லிருந்து 10 நாட்களுக்குள் காவல்துறை ஒத்துழைப்பால் அறிக்கை பெறப்பட்டு, பாஸ்போர்ட் உடனடியாக விண்ணப்பதாரர்களுக்கு விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. தட்கல் முறையில் தினமும் 80 விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தட்கல் முறையில் விண்ணப்பிக்கும்போது, அனைத்து விவரங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில், பாஸ்போர்ட் அடுத்த நாளே விண்ணப்பதாரர்களுக்கு கிடைக்கும்.
மேலும் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், பாஸ்போர்ட் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்வதற்கு எவ்வித முன் அனுமதியும் பெறாமல், அனைத்து வேலை நாட்களிலும் புதன்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 9.30 மணி முதல் 12 மணி வரை, மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தினை அணுகலாம். இதன் மூலம் கடந்த ஆண்டு மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேலான விண்ணப்பதாரர்கள் பயன் பெற்றுள்ளனர்.