மதுரை:உலகத்திலேயே அதிக தொழிலாளர்கள் பணியாற்றும் மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசு நிறுவனங்களுள் ஒன்றுதான், இந்தியன் ரயில்வே. சற்றேறக்குறைய 13 லட்சம் பேர் இதில் பணியாற்றுகின்றனர். நாடு முழுவதும் உள்ள 16 ரயில்வே மண்டலங்களில் 68 ஆயிரம் கி.மீ. ரயில் பாதை உள்ளது.
சராசரியாக ஆண்டொன்றுக்கு 500 கோடிக்கும் மேற்பட்டோர் இந்திய ரயில்வேயில் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் இம்மாபெரும் நிறுவனத்தில் தமிழ்நாட்டு இளைஞர்களின் பங்கு மிகக் குறைவாகவே உள்ளது என்பது பெரும்பாலானோரின் ஆதங்கமாக உள்ளது. வடமாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் தமிழ்நாட்டிலுள்ள தெற்கு ரயில்வேயில் தொடர்ந்து படையெடுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் நீண்ட நெடுங்காலமாக உள்ளது.
ஐடிஐ முடித்தால் போதும்: ஆனால், இந்தப் பணிகளையும் நாம் எளிதாக வெல்ல முடியும். அதற்கான கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு முடித்தவுடன் ஐடிஐ முடித்தால் போதும், ரயில்வே தேர்வுகளை எளிதாக எழுதி தேர்ச்சி பெற இயலும் என்கிறார், இளைஞர் பாண்டுரங்கன். ரயில்வே பணிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் நுழைய வேண்டும் என்ற தீராத தாகத்தில், தமிழ்நாடு முழுவதும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்குச் (ஐடிஐ) சென்று ரயில்வே தேர்வுகள் குறித்து இலவச விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இவர் பொறியியல் பட்டம் வென்றவர். ஆனால், முழுநேரமும் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே தனது பணியாக ஏற்றுச்செயல்படுகிறார்.
அறியாமையே காரணம்: இளைஞர் பாண்டுரங்கன் கூறுகையில், 'ரயில்வேயில் பணி புரிய வேண்டும் என்ற எனது லட்சியத்திற்குப் போதுமான வழிகாட்டுதல்கள் இல்லாத காரணத்தால், அதனை அடைய முடியாமல் போய்விட்டது. அந்த நிலை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இனி ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில், கடந்த 5 ஆண்டுகளாக இந்த விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொண்டு வருகிறேன்.
தமிழ்நாடு அரசு வழங்கக்கூடிய ஐடிஐ படிப்பின் மகத்துவம் என்ன..? ரயில்வேயில் அப்படிப்பிற்கான வேலை வாய்ப்புகள் எவை..? என்பது குறித்து ஐடிஐ மாணவர்களுக்கு சொல்லி வருகிறேன். லட்சக்கணக்கான ரயில்வே வேலை வாய்ப்புகளுக்கு ஐடிஐ படிப்பே முக்கிய நுழைவுவாயிலாகும். ஆனால், அறியாமை காரணமாக ரயில்வே பணிகளுக்குள் அவர்கள் கவனம் செலுத்தவில்லை' என்கிறார், வேதனையுடன்.
கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள் :இந்நிலையை மாற்றுவதற்காகவே முழு நேர விழிப்புணர்வு பரப்புரையை இவர் மேற்கொண்டு வருகிறார். அண்மையில் ரயில்வேயின் பல்வேறு பணிகளுக்கு ஐடிஐ மட்டுமே முதன்மைத்தகுதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை தமிழ்நாடு மாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்கிறார். ஆனால், இந்த விழிப்புணர்வு வடமாநில மாணவர்களுக்கு இருக்கின்ற காரணத்தால், ஐடிஐ முடித்ததும் ரயில்வே தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள்.
தமிழ்நாட்டில் ஐசிஎஃப், பொன்மலை போன்ற நிறுவனங்கள் உள்ளன. இங்கெல்லாம் ஐடிஐ படித்தவர்களுக்கே வாய்ப்பு என்பதை தமிழ்நாட்டு மாணவர்கள் உணரவில்லை. அதேபோன்று ஓராண்டு அப்ரண்டீஸ் படிப்புகளுக்கு வாய்ப்பு உள்ளதும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. ரயில்வே மட்டுமன்றி, மத்திய அரசின் இஸ்ரோ, பெல், ஓஎன்ஜிசி, கெயில், செயில், கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணுஉலைகள் ஆகியவற்றிலெல்லாம் ஐடிஐ மாணவர்களுக்கே வாய்ப்புகள் அதிகம்' என்கிறார்.
இந்தி அவசியமில்லை:பொதுவாகவே நமது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இதுபோன்ற நிறுவனங்களில் சேர நடைபெறும் தேர்வுகளில் இந்தி தெரிந்திருக்க வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால், தமிழ்மொழியிலேயே தேர்வு எழுத முடியும். இதுகுறித்து போதுமான விழிப்புணர்வு தமிழ்நாட்டில் இல்லை. இதற்குக் காரணம், ரயில்வே தேர்வு குறித்த வழிகாட்டி நூல்கள் போதுமானதாக இல்லை.
இதற்காகவே ஓராண்டு கடும் உழைப்பின் வாயிலாக ரயில்வே தேர்வு எழுதும் தமிழ்நாட்டு மாணவர்களுக்காக தமிழிலேயே நூல் ஒன்றையும் பாண்டுரங்கன் தனது நண்பர் மனோஜ்குமார் துணையோடு உருவாக்கியுள்ளார். இதற்காக ரயில்வே ஊழியர்கள் ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளதாகக் குறிப்பிடுகிறார்.