மதுரை: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியராஜ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில்,
"விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் வடக்கே ஆண்டிப்பட்டி மலைகள், தெற்கே திருநெல்வேலி மாவட்டம், கிழக்கே ராஜபாளையம் நகர் பகுதி மற்றும் மேற்கில் தேனி பகுதிகளை எல்லைகளாக கொண்டுள்ளது.
இந்த சரணாலயத்தில் வங்காளப் புலிகள், யானைகள், பறக்கும் அணில்கள், இந்திய ராட்சத அணில்கள், சிறுத்தை, நீலகிரி லங்கூர், முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி மற்றும் காட்டுப் பூனைகள் போன்ற பல்வேறு அரிய வகை விலங்குகள் வாழ்கின்றன. மேலும் இதே வனப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கட்டழகர் கோயில் உள்ளது.
இந்த கோயிலுக்கு ஒவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்றும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய செல்கின்றனர். அப்படி செல்லக்கூடிய பொதுமக்கள் வனத்துறையிடம் உரிய அனுமதியின்றி கோயிலில் தங்குகின்றனர்.
மேலும் வனப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கும் விதமாக அசுத்தம் செய்கின்றனர் இதனால் வனவிலங்குகளும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனவிலங்கு சரணாலயத்திற்குள் அமைந்துள்ள கோவிலுக்கு பொதுமக்கள் செல்வதை வரைமுறை செய்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.