உலகப் புகழ்பெற்ற வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும். இதில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்றால் கூடுதல் மவுசுதான்.
இந்நிலையில், இந்தாண்டு நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், 22 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் ரஞ்சித் குமார் காரை பரிசாகப் பெற்றார்.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ஷுஸ்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கை உறுப்பினரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலருமான பாலசந்திரன் மாடுபிடி வீரர் ரஞ்சித்துக்கு கறவை மாட்டை பரிசாக வழங்குவதாக அறிவித்திருந்தார்.
ஹுஸ்டன்பல்கலைக்கழகம் சார்பில் மாடுபிடி வீரருக்கு கறவை மாடு பரிசு அதன்படி, ஹுஸ்டன் பல்கலைக்கழகம் சார்பில் ரஞ்சித் குமாருக்கு ரூ. 55 ஆயிரம் மதிப்புள்ள கறவை மாடு, 55 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சாசோலை வழங்கப்பட்டன. பரிசினை மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய கிருஷ்ணன், அமெரிக்கா ஹுஸ்டன் பல்கலைக்கழகம் பெறும் முயற்சி எடுத்துச் சிறந்த மாடுபிடி வீரருக்கு கறவை மாடு பரிசளித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியான செயல் என்றும், உழைப்பவர்களுக்கு வெற்றி உறுதி என்றும் தெரிவித்தார்.
பின்னர், வீரர் ரஞ்சித் தாரை தப்பட்டை முழங்க வீதி வழியாக அழைத்துச் செல்லப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் பகுதியில் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.