தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கதை கேளு... கதை கேளு... மறை(ற)ந்த முடிசூடா மன்னன் மருதநாயகத்தின் கதை கேளு! - கமலஹாசன் மருதநாயகம்

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மண்ணின் விடுதலைக்காக வாழ்ந்த மருதநாயகத்தின் வரலாறு இன்றைய தலைமுறையினர் அறியாத ஒன்றாகும். மதுரையில் கான்பாளையம், கான்சா மேட்டுத்தெரு, கான்சாபுரம், மம்சாபுரம், கான்சாகிப்புரம் ஆகிய பெயரெல்லாம் இந்த மன்னனின் பெயரைத் தாங்கி, இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

history of Marudhanayagam

By

Published : Oct 15, 2019, 7:10 PM IST

Updated : Oct 15, 2019, 9:49 PM IST

ஆங்கிலேயரை எதிர்த்து ஆட்சிபுரிந்த குற்றத்திற்காகத் தொழுகையின்போது, சூழ்ச்சியால் மருதநாயகம் என்ற யூசுப்கானை கைது செய்து, மதுரையில் 1764ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் நாள் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். இன்று அவரது 255ஆவது நினைவுநாளாகும்.

மக்கள் விரும்பும் தனிப்பெரும் ஆட்சியாளனாக மதுரையின் நீர்நிலைகளைச் சீரமைத்து அவ்வப்போது இங்கு நிகழ்ந்துவந்த கலவரங்களை ஒடுக்கியும் பல்லாண்டு காலமாக ஆக்கிரமிக்கப்பட்டுக் கிடந்த மீனாட்சியம்மன் கோயில், அழகர் கோயில் நிலங்களைக் கைப்பற்றி மீண்டும் அக்கோயில்களின் நிர்வாகத்திடமே ஒப்படைத்து மிகச்சிறந்த ஆட்சியை வழங்கியவர்தான் கான்சாகிபு என்ற கம்மாந்தோகான் என்ற மருதநாயகம்.

தற்போதைய ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள பனையூர்தான் மருதநாயகம் பிறந்த ஊர். இந்த ஊரில் வாழ்ந்த வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், பின்னாளில் அவர்கள் அனைவரும் இஸ்லாத்துக்கு மதம் மாறினர். அதன் காரணமாக மருதநாயகம் யூசுப்கான் என்று அழைக்கப்பட்டார். இளம் வயதிலேயே மிகக் கூர்மையான அறிவு நுட்பமும் போர்க்கலைகளில் வல்லவராகவும் திகழ்ந்ததால்தான் தஞ்சைக்குச் சென்று பிரதாப சிம்மன் படையிலும் புதுச்சேரியிலிருந்த பிரெஞ்சுப் படைகளில் இணைந்து தளபதியாகவும் உயர்ந்தார்.

பிரெஞ்சுப் படை ஆங்கிலேயருடன் இணைந்து நடத்திய பல்வேறு போர்களில் யூசுப்கான் வெற்றிகளைக் குவித்தார். ஒரு கட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு மிகப்பெரும் தலைவலியாக மாறினார். இதனால் அவரை வீழ்த்துவதற்கு பல்வேறு யுக்திகளை ஆங்கிலேயர்கள் மேற்கொண்டனர். இதற்கிடையே பிரெஞ்சுக்காரர்களோடு யூசுப்கானுக்கு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, அப்படையிலிருந்து வெளியேறி ஆங்கிலேயர்களுடன் இணைந்துகொண்டார்.

பின் ஆங்கிலப்படையில் இணைந்து பல்வேறு போர்களில் தளபதியாகப் பணியாற்றினார். இந்த சூழலில்தான் தமிழ்நாட்டின் தென்பகுதிகளில் வெள்ளையரிடம் அடிபணிய மறுத்த பூலித்தேவர், அழகுமுத்து ஆகியோரோடு சண்டையிட்டு அவர்களையும் வென்று காட்டுகிறார். இதன் காரணமாக ஆங்கிலப்படையில் யூசுப்கானின் புகழ் பரவத் தொடங்குகிறது. அதே காலகட்டத்தில் திப்புசுல்தானின் தந்தை ஹைதர் அலியுடன் நடைபெற்ற போரிலும் வெற்றிபெற்று ஆங்கிலேயர்களை வியப்பில் ஆழ்த்துகிறார்.

மதுரை போற்றும் மாமன்னன் மருதநாயகத்தின் நினைவாக கட்டப்பட்ட மசூதி

இந்த வெற்றியின் விளைவால்தான் தளபதி பதவியிலிருந்து அடுத்த பெரிய பொறுப்பான ஆளுநர் பதவி யூசுப்கானைத் தேடிவந்தது. திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு போர்களில் யூசுப்கான் படை வென்ற காரணத்தால் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆளுநராக ஆளும் பொறுப்பு 1759ஆம் ஆண்டு அவரைத் தேடிவந்தது.

நீர்நிலைகளைச் செப்பனிடுதல், சாலைகளை அமைத்தல், உள்ளூர்க் கலகக்காரர்களை ஒடுக்கி மக்கள் நிம்மதியாக வாழ வழிசெய்தல், ஆக்கிரமிப்பிலிருந்த கோயில் நிலங்களைக் கையகப்படுத்தி மீண்டும் கோயில்களுக்கு வழங்குதல் என பல்வேறு மக்கள் பணிகளை மிகக் குறுகிய காலத்தில் மேற்கொண்டார். இதன் காரணமாக மதுரை மக்கள் அவரை 'மருதநாயகம்' என்ற பெயரால் அழைக்கத் தொடங்கினர்.

ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநராக இருந்தபோதும் பொதுமக்களிடம் மருதநாயகத்திற்குப் பெருகிய செல்வாக்கை பிரிட்டிஷாரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் அவரது ஆட்சிக்கு கடும் நிர்பந்தம் விதித்தனர். ஒரு கட்டத்தில் மருதநாயகம் மதுரையின் சுதந்திர ஆட்சியாளனாக தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டார். இதன் பிறகு, ஹைதர் அலியிடமும் பிரெஞ்சுக்காரர்களிடமும் நட்பு பாராட்டினார்.

இந்தக் கூட்டணி உருவாவது ஆங்கிலேயர்களுக்குப் பிடிக்கவில்லை. மருதநாயகத்தின் படையிலிருந்த பிரெஞ்சுத் தளபதி மார்சன், அமைச்சராயிருந்த சீனிவாசராவ், மெய்க்காவலர்கள் பாபாசாஹிப், சேகுகான் உள்ளிட்டோரைக் கொண்ட துரோகக் கும்பலை உருவாக்கி, தொழுகையிலிருந்த மருதநாயகத்தை 1764 அக்டோபர் 13ஆம் நாள் சிறைப்பிடித்தனர். பிறகு வெள்ளையர்களால் சித்ரவதை செய்யப்பட்டு, மதுரைக்கு மேற்கே இன்றைய காளவாசலுக்கு அருகேயுள்ள சம்மட்டிபுரத்திலிருந்த மாமரத்தில் தூக்கிலேற்றப்பட்டார்.

தூக்கிலேற்றப்பட்ட கயிறு இரண்டு முறை அறுந்துவிழுந்தது. மூன்றாவது முறையாகவே மருதநாயகம் தூக்கிலேற்றப்பட்டு கொல்லப்பட்டதை ஆங்கிலேய அரசு உறுதி செய்தது. அத்துடன் விடாமல் அவரது உடலை கைகள், கால்கள், தலை, உடல் எனத் தனித்தனியாக அறுத்து தலையை திருச்சிக்கும், கைகள் பாளையங்கோட்டைக்கும், கால்கள் பெரியகுளத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டு புதைக்கப்பட்டன. உடலை மட்டும் தூக்கிலிட்டப்பட்ட இடத்தின் அருகே புதைத்தனர். அந்த இடத்தில்தான் அவரது நினைவாக பள்ளிவாசல் எழுப்பப்பட்டு, இஸ்லாமிய மக்களால் வழிபாட்டுத் தலமாக பராமரிக்கப்பட்டுவருகிறது.

1808ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்தப் பள்ளிவாசல், 'மகான் முகம்மது யூசுப்கான் தர்ஹா' என்ற பெயரில் அவரது உடல் புதைக்கப்பட்ட கல்லறையோடு இன்றைக்கும் மதுரை சம்மட்டிபுரத்தில் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. மதம், சாதிகளுக்கு அப்பாற்பட்டு மண்ணின் விடுதலைக்காக வாழ்ந்த மருதநாயகத்தின் வரலாறு இன்றைய தலைமுறையினர் அறியாத ஒன்றாகும்.

மதுரையில் கான்பாளையம், கான்சா மேட்டுத்தெரு, கான்சாபுரம், மம்சாபுரம், கான்சாகிப்புரம் ஆகிய பெயரெல்லாம் இந்த மன்னனின் பெயரைத் தாங்கி, இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

Last Updated : Oct 15, 2019, 9:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details