மதுரை: திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்,"மத்திய அரசு இந்தியா முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த திட்டங்களை செயல்படுத்தும் போது இந்தியில் தான் பெயர் வைக்கப்படுகிறது.
அந்த திட்டங்களை தமிழ் நாட்டில் அமல்படுத்தும் போது தமிழக அரசின் விளம்பரங்கள் மற்றும் செய்தி குறிப்புகளில் மேற்படி திட்டங்களை அப்படியே தமிழ் மொழியில் எழுதுகிறார்கள் (உதாரணமாக பிரதான் மந்திரி முந்த்ரா யோஜனா). இவ்வாறு தமிழில் எழுதுவதால் தமிழர்களுக்கு அதன் அர்த்தம் புரியாது. தமிழில் எழுதி உள்ளதால் இந்தி மொழி மட்டும் அறிந்தவர்களும் படிக்க இயலாது.
அதே போல் LIC நிறுவனமும் பாலிசிகளுக்கு இந்திப் பெயர்களைத் தான் வைக்கிறார்கள். மேலும் முன்பு தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்களுக்கு வைகை, பல்லவன், பாண்டியன், பொதிகை என்று பெயர் வைத்தனர். தற்போது அந்தோதையா, தேஜஸ், டோரன்டோ மற்றும் சுவேதா எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைக்கிறார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.