தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி மலைக்கோட்டைப் பகுதியில் விளக்குகள் அமைக்க தடை கோரிய வழக்கு : தொல்லியல் துறை பதிலளிக்க உத்தரவு

மதுரை : திருச்சி மலைக்கோட்டைப் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய விளக்குகள் அமைப்பதற்கு தடை விதிக்க கோரிய வழக்கில், தொல்லியல், இந்து சமய அறநிலையத் துறைகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai highcour bench
madurai highcour bench

By

Published : Oct 22, 2020, 2:44 PM IST

திருச்சி மலைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த சுந்தர் ராஜன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், “திருச்சி மலைக்கோட்டையின் பல தெருக்களில் பண்டைய கால சிறு சிறு குன்றுகள் உள்ளன . அதில் பல்லவர் காலத்து குகைகள், ஆறாம் நூற்றாண்டின் நினைவுச் சின்னங்கள், பாமினி மற்றும் புத்த கோயில்களும் உள்ளன .

இந்தக் கோயில்கள் அமைந்துள்ள வடக்குத்தெருவானது சுமார் 12 அடி அகலம் மட்டுமே உள்ளது. இந்நிலையில் இந்தப் பகுதியில் 100 மின் கம்பங்கள், ஹை மாஸ் விளக்குகள் அமைப்பதற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிவெடுக்கப்பட்டு, அத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விளக்குகள் அமைத்தால், இந்த குகையை ஒட்டியுள்ள நினைவுச் சின்னங்கள் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் இங்குள்ள கோயில்களின் தேரோட்டமும் இந்தத் தெருவில்தான் நடக்கும். இந்தத் தெருவிளக்குகள் அமைப்பதால் தேரோட்டங்கள் நடத்த இயலாத நிலை ஏற்படும்.

எனவே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தும் இவ்விளக்குகளை அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (அக்.22) விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ”பழங்காலத்து சின்னங்கள் சிதைக்கப்பட்டு தெரு விளக்குகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே இந்தப் பணிக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மனு குறித்து தொல்லியல், இந்து அறநிலையத் துறைகளை உரிய விளக்கம் அளிக்கக்கோரி சம்மன் அனுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details