மதுரை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள தளக்காவூர் கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி, அந்த கிராமத்தைச் சேர்ந்த மரிய செல்வராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "எங்கள் கிராமம் 1,000 குடும்பங்களைக் கொண்டது. பெரும்பாலான மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். எங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து சமூக மக்களும் ஒன்று கூடி திருவிழாவைக் கொண்டாடி வருகின்றனர். இத்திருவிழாவில் எங்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில் எங்கள் கிராமத்தில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடத்த முடிவு செய்து, அதற்காக அனுமதி கேட்டோம். ஆனால், கடந்த 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போராட்டங்களைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு, ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடத்தும் கிராமங்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது. அதில் எங்கள் ஊர் இடம் பெறவில்லை என்பதால், அனுமதி வழங்கப்படவில்லை. இதேபோல் ஏராளமான கிராமங்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் விடுபட்டுள்ளன.
இந்த விடுபட்ட கிராமங்கள், கோரிக்கை மனு கொடுத்து அந்தப் பட்டியலில் பெயர்களைச் சேர்த்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சில கிராமங்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. இதேபோல் எங்கள் கிராமத்தையும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்தும் கிராமங்களின் பட்டியலில் சேர்த்து, வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த மனு இன்று(ஏப்.26) நீதிபதி T.ராஜா, நீதிபதி சுப்பிரமணியன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கைகளை விசாரித்த நீதிபதிகள், "இந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் மலம்பட்டி, குமாரபேட்டை, பனகுடி, அரியக்குடி ஆகிய கிராமங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கி உள்ளார். இதே மாவட்டத்தில் 4 கிராமங்களில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தளக்காவூர் கிராமத்தில் காலம்காலமாக மஞ்சு விரட்டு நடந்து வருகிறது? - ஆனால் இந்த கிராமத்திற்கு ஏன் அனுமதி வழங்கவில்லை?" என்று கேள்வி எழுப்பினர். உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை என அரசு தரப்பு கூறுவது ஏற்புடையது அல்ல என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து தளக்காவூர் கிராமத்தில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி மஞ்சு விரட்டு நடத்த அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த கிராமத்தை ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடைபெறும் கிராமங்களின் பட்டியலில் சேர்க்க சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: Madras High Court: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து மனு.. அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!