மதுரையை சேர்ந்த நேதாஜி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், விருதுநகர் முதல் கோவை வரை 765 kV DC உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து விருதுநகர் முதல் கோவை வரை பல லட்ச ஏக்கர் விவசாய நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரம் செல்ல உள்ளது.
மின்கோபுரம் அதிக மின் சக்தி உள்ளதாக இருக்கிறது. அதனால் விவசாயம் பெரும் அளவில் பாதிக்கப்படும். மின்சாரம் செல்லும் பகுதியில் பறவைகள், கால்நடைகள் வளர்க்க இயலாது. தொடர்ந்து அப்பகுதியில் வாழும் மக்களுக்கு உடல்நிலை கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது.
உயர் அழுத்த மின் கோபுரம் மூலம் கொண்டு செல்லப்படும் மின்சாரம் பெரும் அளவில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே பயன்படும். இதனால் பல விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். அருகில் குடியிருப்புகள் கட்டவோ, குடியிருக்கவோ இயலாது. எனவே விருதுநகர் முதல் கோவை வரை 765 kV DC உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைக்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: விவசாய நிலத்தில் மின் கோபுரம்: இழப்பீடு கிடைக்காமல் தவிக்கும் விவசாயி!