மதுரை மாநகரின் போக்குவரத்து சிக்கல்களைத் தீர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் முக்கிய பல சந்திப்புகளில் பல்வேறு பாலங்கள் கட்டப்பட்டன. இருப்பினும் மக்கள் தொகைக்கு ஏற்ப மேலும் பாலங்கள் மதுரை மாநகருக்கு அவசியமாக உள்ளது.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த ஹரி விக்னேஷ் என்பவர் மதுரையில் அமையவுள்ள மேம்பாலப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கோரியிருந்தார். அதற்கு பொது தகவல் அலுவலர் பதிலளித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் அமையவிருக்கும் மேம்பால பணிகளுக்கான திட்ட மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகின்ற நிலையில், இப்பணி முடிவுற்றவுடன் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதேபோன்று நெல்பேட்டை தொடங்கி அவனியாபுரம் புறவழிச்சாலை சந்திப்பு வரை அமைக்கப்பட உள்ள உயர்மட்ட பாலத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சிம்மக்கல் யானைக்கல் வரை உயர்மட்ட மேம்பாலம் கட்ட விரிவான அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை ஆவின் சந்திப்பிலிருந்து அப்போலோ சந்திப்பு வரை உருவாக்கப்படவுள்ள உயர்மட்டப் பாலம் அப்போலோ சந்திப்பையும் கடந்து அமைக்கத் திட்டமிட்டிருப்பதாக ஆர்டிஐயில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.