தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கைதியை தாக்கிய சிறைக்காவலர்கள் மீது வழக்குப் பதிவு - குற்றவியல் வழக்குகள்

மதுரை: மத்திய சிறையில் கைதியை தாக்கிய சிறைக்காவலர்கள் மற்றும் ஜெயிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

கைதியை தாக்கிய சிறைக்காவலர்கள் மீது வழக்குப் பதிவு
madurai

By

Published : Jan 24, 2020, 10:07 PM IST

மதுரை முனிச்சாலையை சேர்ந்த முனியம்மாள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.அதில், "திருச்சி மத்திய சிறையில் எனது மகன் முனியசாமி தடுப்பு காவலில் அடைக்கப்பட்டுள்ளார். 5 .10.2019 அன்று எனது மகன் திருச்சி சிறையில் ஆறாவது கோபுரம் அருகே இருந்துள்ளார். அப்போது ஆனந்தன் மற்றும் ஸ்ரீதர் என்ற இரண்டு கைதிகளை , சீருடை அணியாமல் இருந்த காவலர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அப்பொழுது திருச்செல்வம் என்ற கைதி எதற்காக இருவரையும் அடிக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு சிறைக்காவலர்களான புண்ணியமூர்த்தி, முருகானந்தம் ஆகிய இருவரும் திருச்செல்வத்தை தாக்கியுள்ளனர்.

இதை பார்த்த எனது மகன் முனியசாமி குறுக்கிட்டு ஏன் திருச்செல்வத்தை தாக்குகிறீர்கள், அவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறியுள்ளார். உடனே, சிறைக்காவலர்கள் இருவரும் சேர்ந்து எனது மகன் முனியசாமி தலையில் தாக்கியிருக்கிறார்கள். பலத்த காயம் அடைந்த எனது மகனை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின் தனிமை சிறையில் அடைத்து கொடுமை படுத்துகின்றனர். என்னை பார்க்கவும் அனுமதிக்கவில்லை.

மேலும் எனது மகன் முனியசாமி திருச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது JM 2 நீதிபதியிடம், நடந்த சம்பவம் குறித்தும் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மனு கொடுத்தார்.

அந்த மனுவை JM 2 நீதிபதி, திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க அனுப்பி வைத்தார் . ஆனால் இதுவரை எந்தவித வழக்கும் பதிவு செய்யவில்லை. எனவே இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற வேண்டும். எனது மகனை சிறைத்துறை அதிகாரிகள் எந்த விதத்திலும் துன்புறத்தக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது, அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சிறைக்காவலர்கள் புண்ணியமூர்த்தி, முருகானந்தம் ஆகியோர் மீதும் மற்றும் ஜெயிலர் ரமேஷ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறி அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details