மதுரை கே.கே. நகரைச் சேர்ந்த இம்மானுவேல், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார், அதில், "மதுரை உத்தங்குடியிலிருந்து கப்பலூர் வரையிலான சுற்றுச்சாலையை நான்கு வழிச்சாலை மாற்றப்பட்டுள்ளது.
இந்தச் சாலையில் தற்போது மஸ்தான்பட்டி, சிந்தாமணி, பரம்புப்பட்டி ஆகிய மூன்று இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு, செயல்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மேலூர் சிட்டம்பட்டி, தூத்துக்குடி சாலையில் எலியார்பத்தி, திருமங்கலம் சாலையில் கப்பலூர் என மூன்று சுங்கச்சாவடிகள் பல ஆண்டுகளாக செயல்பட்டுவருகின்றன.
தற்போது சென்னையிலிருந்து விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் மதுரை மாவட்டத்தில் மட்டும் சிட்டம்பட்டி, மஸ்தான்பட்டி, சிந்தாமணி, பரம்புப்பட்டி (விமானநிலையம் அருகில்), கப்பலூர் என ஐந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் தேங்கி நிற்பதால் அவசரமாக செல்ல வேண்டிய அவசர ஊர்தி போன்ற வாகனங்கள் சிரமப்படுகின்றன.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிகளின்படி, நான்கு வழிச்சாலையில் 60 கிலோ மீட்டர் தூரத்தில்தான் சுங்கச்சாவடி அமைக்க வேண்டும். மேலும், அதில் செல்லும் கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு கிலோ மீட்டருக்கு 0.65 பைசாதான் வசூலிக்க வேண்டும். ஆனால் மதுரை மாவட்டத்தில் மஸ்தான்பட்டியிலிருந்து விமான நிலையம் அருகில் உள்ள பரம்புப்பட்டி (விமானநிலையம் அருகில்) வரை 27 கிலோ மீட்டருக்குள் மூன்று சுங்கச்சாவடிகளில் இந்த வாகனங்களிடமிருந்து ரூ.60 வசூலிக்கப்படுகிறது. இது நெடுஞ்சாலை ஆணைய விதிகளுக்குப் புறம்பானது.