மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," நான் மதுரை சட்டக்கல்லூரியில் மூன்றாண்டு சட்டப் படிப்பை தமிழ் வழியில் பயின்று 2017ல் வழக்கறிஞராக பதிவு செய்தேன். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019 ஜனவரி 1 ல் துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது. அதற்கு நான் விண்ணப்பித்திருந்தேன்.
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, எழுத்து தேர்வும் எழுதினேன். அதைத்தொடர்ந்து பிரதான எழுத்துத் தேர்வு அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் எனது பெயர் இடம்பெறவில்லை. தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டிலும் நான் தேர்வு செய்யப்படவில்லை. விதிப்படி தமிழ் வழியில் கல்வி பயின்றவருக்கு 20% இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளது.
அந்த இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு நான் தகுதியானவராக இருப்பினும் எனக்கு அந்த சலுகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான இட ஒதுக்கீட்டு சலுகை, தொலைநிலை கல்வியில் பயின்றவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தொலைநிலைக் கல்வி பயின்றவர்களுக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு வழங்குவது பொருத்தமாக இருக்காது.