தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைச் சேர்ந்த கிருபா ராணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், " என் குடும்பத்தை மீறி நான் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டேன். எங்களை என் குடும்பத்தினர் மிரட்டி வருகின்றனர். எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை. சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி சிறப்புக்குழு அமைக்க 2016ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை.
என் குடும்பத்தினர் கொலை மிரட்டல் குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே காவல் கண்காணிப்பாளர், ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் தலைமையில் குழு அமைத்துச் சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை மிரட்டுவோர் மீது உயர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி சிறப்புக் குழு அமைக்க வேண்டும் என 2016ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகலுடன் மனுதாரர் அரசை நாடி தீர்வு காணலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க:1570 கோடி ரூபாய் வருமானம் எப்படி கிடைக்கும்? துணை வேந்தருக்கு தமிழ்நாடு அரசு கடிதம்!