மதுரை: தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 22ஆம் தேதி தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதன்படி மதுரை மாவட்டத்தின் டி.கல்லுபட்டி பேரூராட்சிக்கான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 10ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி, சுயேட்சையாக போட்டியிட்ட பழனிசெல்வி ஆகிய இரு வேட்பாளர்களும் சம அளவில் வாக்குகள் பெற்றனர். இதனால் குலுக்கல் முறையில் வார்டு உறுப்பினர் தேர்வு நடத்தப்பட்டது.
இதில் பழனிசெல்வி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். இந்த அறிவிப்பை ரத்து செய்யுமாறும் தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்குமாறும் பழனிசெல்வி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் குலுக்கல் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட காணொலியை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று (மார்ச்.4) மீண்டும் விசாரணைக்கு வந்தது.