திருச்சி சுப்ரமணியபுரத்தில் பாதிரியார் திதியோன் ஜேக்கப் என்பவர் காப்பகம் நடத்தி வந்தார். இதில், பெற்றோரால் கைவிடப்பட்ட ஏராளமான குழந்தைகள் தங்கி படித்தனர். அதில் தங்கிபடித்த குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று முறைகேடாக வருவாய் ஈட்டுவதாக பாடம் நாராயணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தவும், காப்பகத்தை மாவட்ட சமூக நலத்துறை ஏற்று நடத்த வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டடிருந்தது.
இந்நிலையில் காப்பகத்திலுள்ள பெண் குழந்தைகள் ஒன்பது பேர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், திருச்சி காப்பகத்திலுள்ள எங்களை தஞ்சாவூர் காப்பகத்திற்கு மாற்றி மாவட்ட சமூக நல அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவுக்கு தடை விதித்து அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.