தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் ஆதி திராவிடர்களைச் சேர்க்கக் கோரிய மனு - மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க ஆணை

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

palamedu jallikattu function committee  ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் ஆதிதிராவிடர்களைச் சேர்க்க கோரிய மனு  ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் ஆதிதிராவிடர்களைச் சேர்க்க கோரிய மனு: ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு  பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழு  பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழு பிரச்னை
ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் ஆதிதிராவிடர்களைச் சேர்க்க கோரிய மனு

By

Published : Jan 7, 2020, 8:31 PM IST

மதுரை பாலமேடு பகுதியைச் சேர்ந்த சந்தானம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ' ஆண்டுதோறும் தை இரண்டாம் நாள் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். பாலமேடு 15 வார்டுகளைக் கொண்ட பேரூராட்சியாக உள்ளது. இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இதில், ஆயிரம் பேர் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். வழக்கம் போல் இந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான விழா குழுவில் ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க வாய்ப்பளிக்கவில்லை. ஆதி திராவிட சமூகத்தினரிடம் இருந்து விழாவுக்கான நன்கொடைகள் வசூலிக்கப்படுகின்றன.

இச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 10 காளைகள் வளர்த்து வருவதோடு, தொடர்ந்து ஜல்லிக்கட்டில் பங்கேற்று வருகின்றனர். விழாவில் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசு வழங்குவதற்காகப் பெறப்படும் நன்கொடைகள் கோடிக்கணக்கான ரூபாயாக உள்ளது.

ஆனால், அவை தொடர்பான கணக்குகளை முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை. ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கும் வகையில் அமைதிக்குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

இதையும் படிங்க: ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வழக்கு: இன்று விசாரணை..!

ABOUT THE AUTHOR

...view details