தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில்கள் பெயரில் உள்ள போலி இணையதளங்களை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாடு முழுவதும் கோயில் பெயரில் உள்ள அங்கீகரிக்கப்படாத, சட்டவிரோதமான, போலி இணையதளங்களை முடக்கி உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கோவில்கள் பெயரில் உள்ள போலி இணையதளங்களை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
கோவில்கள் பெயரில் உள்ள போலி இணையதளங்களை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

By

Published : Jan 31, 2023, 7:51 PM IST

மதுரை: தமிழ்நாட்டில் உள்ள பல பிரபல கோயில்களின் பெயரில் போலி இணையதளங்கள் தொடங்கி, காணிக்கை வசூல் செய்து மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அந்த இணையதளங்களை முடக்கவும் உத்தரவிடக் கோரி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் மார்கண்டன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணன் அமர்வு, "தமிழகம் முழுவதும் கோயில்கள் பெயரில் உள்ள அங்கீகரிக்கப்படாத, சட்டவிரோதமான, இணையதளங்களை முடக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த இணையதளங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற வருவாயை, சைபர் கிரைம் காவல் துறை மூலமாக கண்டறிந்து கணக்கிட்டு, அவற்றைப் பறிமுதல் செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும் தகவல் தொழில்நுட்பத்துறை மூலமாக, கோயில்களின் இணையதள முகவரிகளை தெரியப்படுத்தி, போலி இணையதள முகவரிகள் எந்த வகையில் இருந்தாலும் முடக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்களில் பூஜைகள், நன்கொடை வழங்குவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி இணையதளங்கள் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

போலி இணையதளங்கள் குறித்து புகாரளிக்க தனி அலுவலரை நியமிப்பதோடு, தனி தொலைபேசி எண்ணையும் உருவாக்கி போலி இணையதளங்களை இயக்குவோர் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சைபர் கிரைம் காவல்துறையினரும் இது போன்ற புகார்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதோடு, ஆய்வு செய்து உரிய நடவடிக்கை வேண்டும்.

கோயில்களில் உண்டியல்களை வைத்து அவற்றிலேயே காணிக்கைகளை செலுத்த அறிவுறுத்த வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் மூலம் செலுத்த அறிவுறுத்த வேண்டும். கோயில் சேவைகளுக்கான கட்டணம் கோயில் நிர்வாகத்தால் வசூலிக்கப்படுகையில் உரிய ரசீது கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். மேலும் அர்ச்சகர்கள், புகைப்படக் கலைஞர்கள், வழிகாட்டிகள் மற்றும் அலுவலர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.

இதனால் மூன்றாம் நபர்கள் தேவையற்று கோயிலினுள் நுழைந்து கட்டணம் வசூலிப்பது தடுக்கப்படும். அது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், அதனை கண்காணித்து சட்டவிரோதங்கள் இருப்பின், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பதி, சபரிமலை கோயில்களைப் போல தமிழ்நாடு கோயில்களின் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், இந்த உத்தரவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டது தொடர்பாக 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:மதுரையில் 1 மணி நேர பைக் நிறுத்தினால் ரூ.10 வாடகை திட்டம் - மாநகராட்சி முடிவு

ABOUT THE AUTHOR

...view details