மதுரை:திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பகுதியை சேர்ந்த மல்லிகா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையில் 1.5 விழுக்காடு மக்கள் பழங்குடியினர். தமிழ்நாட்டில் 36 பழங்குடியின, துணை பழங்குடியின இனங்கள் உள்ளன.
கரோனா நோய்த்தொற்று காலத்தில் பழங்குடியின மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தமிழ்நாடு அரசு கரோனா நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாயையும், 14 முக்கிய சமையல் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கியது.
ஆனால், பழங்குடி இனத்தை சேர்ந்த பல குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை இல்லாத காரணத்தால் இந்த நிவாரணத்தை பெற இயலவில்லை. தமிழ்நாட்டின் பொது விநியோகத் திட்டம் அனைவருக்கும் உணவு கிடைப்பதை; குறிப்பாக, ஏழை மக்கள் உணவு பெறுவதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது.