மதுரை மாவட்டம், திருமோகூரைச் சேர்ந்த மணிராஜா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நானும் இலங்கிப்பட்டியைச் சேர்ந்த கோபிகா என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். கோபிகாவின் பெற்றோர் எங்களது காதலை ஏற்கவில்லை. அத்தோடு கோபிகாவுக்கு விருப்பமின்றி வேறு ஒருவருடன் திருமணம் செய்யவும் ஏற்பாடு செய்தனர்.
இந்நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி கோபிகா வீட்டைவிட்டு என்னுடன் வந்து விட்டார். பிப்ரவரி 8ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டோம். நானும் எனது மனைவியும் மதுரையில் மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தோம். ஹோட்டலுக்கு வந்த ஒத்தக்கடை காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதோடு, தந்தையுடன் செல்லுமாறு எனது மனைவியை கட்டாயப்படுத்தினார்.
எனது மனைவி அவரது தந்தையுடன் செல்ல விருப்பம் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து காவல்துறையினர் தன் (கோபிகா) பெயரில் உள்ள சொத்துக்களை தனது தந்தை பெயருக்கு மாற்றி தந்துவிட்டு என்னுடன் செல்லுமாறு தெரிவித்தனர். அதை ஏற்று சிட்டம்பட்டி பதிவுத்துறை அலுவலகத்திற்கு சென்றபோது கோபிகாவின் தந்தையுடன் வந்த 20 பேர் என்னையும் எனது உறவினர்களையும் தாக்கிவிட்டு வலுக்கட்டாயமாக எனது மனைவி கோபிகாவை காரில் கடத்தி சென்றுவிட்டனர். எனது மனைவியை மீட்டுத் தருமாறு காவல் துறையினரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, அவரை உடனடியாக மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்"எனக் கூறியிருந்தார்.