தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியலூர் மாணவியின் உடலை அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு - அறியலூர் மாணவி தற்கொலை

தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். இவரது உடலை பெற்றோர் அடக்கம் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அறியலூர் மாணவி தற்கொலை விவகாரம் : மாணவியின் உடலை பெற்றோர் அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு
அறியலூர் மாணவி தற்கொலை விவகாரம் : மாணவியின் உடலை பெற்றோர் அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு

By

Published : Jan 22, 2022, 6:18 PM IST

மதுரை:தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த விவகாரம் குறித்து திருக்காட்டுப்பள்ளி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவியை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக்கூறி, அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

சிபிசிஐடிக்கு மாற்ற மனு

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கூறி மாணவியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனிடம் அவசர வழக்காக எடுக்கக்கோரினர்.

நேற்றைய தினம் அவசர வழக்காக விசாரித்த நீதிபதி, காவல்துறையினர் மீது சிறுமியின் பெற்றோரை மிரட்டுவதாக புகார் முன்வைக்கப்படுகிறது. எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர் வழக்கை விசாரிக்க அறிவுறுத்தினார்.

மீண்டும் மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவசர வழக்காக எடுத்து விசாரித்தார். நீதிபதி," மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு அவரது பெற்றொரிடம் கோரிக்கை விடுக்கிறேன். மாணவியின் தந்தை முருகானந்தம், தஞ்சை நீதித்துறை நடுவரிடம் நேரில் ஆஜராகி (164 statement) வாக்குமூலம் வழங்கலாம்.

காணொலி எடுத்தவர் மீது நடவடிக்கை

அவரது இறப்பிற்கு முன்பு, பதிவு செய்யப்பட்ட காணொலி சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. அதில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியதாக சிறுமி கூறியுள்ளார் எனத் தெரியவருகிறது. அந்த வீடியோவை எடுத்த நபரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்போவதாக தஞ்சை காவல் கண்காணிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் உடல் ஏற்கனவே தஞ்சை மருத்துவக்கல்லூரி தடய அறிவியல் மருத்துவர்களால் உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளது. மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக சந்தேகம் ஏதையும் முன்வைக்கவில்லை. ஆகவே, மறு உடற்கூராய்வு செய்யத் தேவையில்லை.

ஆகவே மாணவியின் உடலை, பெற்றோர் பெற்றுக் கொண்டு அடக்கம் செய்ய வேண்டும். நாளை மாணவியின் தந்தையும், தாயும் தஞ்சை நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜராகி, தனது மகள் தன்னிடம் தெரிவித்தவை குறித்தும், மாணவியின் இறப்பு குறித்தும் வாக்குமூலம் அளிக்கவும், அதனை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை திங்கள்கிழமைக்கு (ஜன.24) ஒத்திவைத்தார்.

மேலும், மாணவியின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லத் தேவையான நடவடிக்கைகளை செய்து தர வேண்டும். அவற்றில் காவல்துறையினர் தலையிடக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படவில்லை - தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details