தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசியர்கள் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தேனி அருகே உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்களின் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து இரண்டு வாரங்களில் நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

By

Published : Nov 30, 2019, 8:25 AM IST

தேனி மாவட்டம் உத்தமபாளையம் சீப்பலாக்கோட்டை அரசு உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்களின் நடவடிக்கை குறித்து அப்பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், "தேனி சீப்பாலக்கோட்டையில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி 1961ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தில் சீப்பாலக்கோட்டையைச் சுற்றியுள்ள 10 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இப்பள்ளியில் படித்து வந்தனர். மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 260 வரை இருந்து வந்த நிலையில் தற்போது மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 150ஆக குறைந்துள்ளது.

இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மதிப்பெண் குறைவாக எடுப்பதால் வேறு பள்ளியில் பிளஸ் 1 படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சீப்பாலக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் இப்பள்ளியில் 6ஆம் வகுப்பு சேராமல் வேறு ஊர்களில் உள்ள பள்ளிகளில் சேர்கின்றனர்.

இங்கு வெளியூர்களிலிருந்து வந்து பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகளாக இதே பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர். ஆசிரியர்கள் கற்பித்தலில் ஆர்வம் காட்டுவதில்லை. பதிலாக செல்ஃபோனை பயன்படுத்துவதிலும் கூடிப்பேசி பொழுதுபோக்குவதிலும்தான் ஆர்வமாக உள்ளனர். ஆங்கிலம் வழி, தமிழ் வழி கல்வியை ஒரே வகுப்பறையில் நடத்துகின்றனர்.

இதனால் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் சீரழிந்து வருகிறது. கடமை உணர்வும் அர்ப்பணிப்பும் இல்லாத ஆசிரியர்களால் பள்ளி மூடும் நிலைக்கு சென்றுள்ளது. இதனால், பள்ளியின் தரத்தை உயர்த்தவும் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தவும் அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை இயக்குனர், தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் பள்ளியை ஆய்வு செய்து இரண்டு வாரத்தில் உரிய நடவடிக்கையை எடுக்க உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: போர்வெல் அமைக்க ஆதிதிராவிடர்கள் மானிய கோரிக்கை தள்ளுபடி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details