மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள், நீர்வழிப் பாதைகளை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் நீர்நிலைகளில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் முறையாக செல்வதில்லை. இதனால் மதுரை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 600 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. வைகை ஆற்றில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் இதே நிலை நீடித்தால் மாவட்டமே தண்ணீர் இன்றி பாலைவனமாக மாறிவிடும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் நீதிமன்றமே தாமாக முன் வந்து மதுரை, தேனி, சிவகங்கை, உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களையும் சேர்த்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்த வழக்கில் பல கட்டங்களாக விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் டி.ராஜா, பி.புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வைகை ஆறு தொடங்கி கடலில் கலக்கும் வரை உள்ள தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஐந்து மாவட்ட வருவாய் அலுவலர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க:காக்னிசன்ட் நிறுவனம் ரூ.23 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு