மதுரை: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பிரசித்திபெற்ற தண்டாயுதபாணி கோவிலில் உள்ள 281 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை அறங்காவலர் குழு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆசிரியர்கள், நூலகர், அலுவலக உதவியாளர், சமையலர், கணினி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர்கள், நாதஸ்வர வித்வான், தவில் வித்வான், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 41 வகையான பணிகளில் 281 காலிப்பணியிடங்களை நிரப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பாணையில் அரசு உள் இட ஒதுக்கீடு அறிவிப்பு இல்லை. மேலும், இந்த அறிவிப்பில் பல்வேறு விதிமுறை மீறல்கள் உள்ளன. அதேபோல், இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தார், கோவிலுக்கு எதிராக எந்த வழக்கும் தொடர்ந்திருக்கக்கூடாது - அவ்வாறு தொடர்ந்திருந்தால் அவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை உரிமை மீறலாகும். எனவே, இந்த அறிவிப்பாணையை ரத்து செய்துவிட்டு, உரிய விதிமுறைகளை பின்பற்றி புதிய அறிவிப்பாணையை வெளியிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று(மே.11) நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வின் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விவேக் பாரதி, "இந்த அறிவிப்பாணையில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. சட்ட விதிகளுக்கு முரணான முறையில் அறிவிப்பு உள்ளது.