மதுரை: மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் உள்ளிட்ட சிலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், ”அவனியாபுரத்தில் பல்வேறு சமூகத்தினர் வசிக்கின்றனர். ஆனால் குறிப்பிட்ட சில சமுதாயத்தினர் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்துவதில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இது தொடர்பான ஒரு வழக்கில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடங்கிய குழு அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டில் அனைத்து சமூகத்தினரையும் கொண்ட விழா கமிட்டியே ஜல்லிக்கட்டை நடத்துகிறது. ஆனால் அவனியாபுரத்தில் மட்டும் மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது. ஜனவரி 15ஆம் தேதி நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அனைத்து சமூகத்தினரையும் கொண்ட குழு அமைத்து நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம் அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து சமாதான கூட்டம் நடத்தி அறிக்கையளிக்க வேண்டுமென உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஆர்டிஓ தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது.
அனைத்து சமூகத்தையும் சேர்ந்த 98 பேர் பங்கேற்று சட்டம் - ஒழுங்கு பிரச்சனையைத் தவிர்த்திடும் வகையில் மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டை நடத்துவதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை என பெரும்பான்மையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.