மதுரை: தஞ்சாவூர் சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் "தமிழ்நாட்டில் 2017 ஆம் ஆண்டு முதல், பொங்கலை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு 2.20 கோடி குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான வேட்டி, சேலைகளை தமிழ்நாடு நெசவாளர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பாராட்ட தகுந்த முடிவை எடுத்துள்ளது. இதுவரை அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட 20 வகையான விவசாய பொருட்களை அருகாமை மாநிலங்களில் இருந்தே பெரும்பாலும் வாங்கப்பட்டுள்ளன.
இதற்கு மாற்றாக அவற்றை தமிழ்நாடு விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்தால் விவசாயிகளும் பயனடைவர். இது தொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படக் கூடிய, பொருட்களை தமிழ்நாடு விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு, "கோரிக்கை நியாயமானது, நன்மை அளிப்பது. இது தொடர்பாக அரசு ஏதேனும் முடிவெடுத்துள்ளதா? என கேள்வி எழுப்பினர். அரசு தரப்பில் இது தொடர்பாக தகவல் பெற்று தெரிவிப்பதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் வழக்கு குறித்து தமிழ்நாடு கூட்டுறவுத்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:கோயில்களின் பெயரில் போலி இணையதளங்கள்.. விரைவில் உரிய வழிமுறைகள்!