மதுரை:தீண்டாமையை கடைபிடிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சித்தரேவு கிராமத்தை சேர்ந்த மணி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் காவளபட்டி ஊராட்சிக்குட்பட்ட சித்தரேவு கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த சித்தரேவு கிராமத்தில் உச்சி காளியம்மன் கோவில் செல்வ விநாயகர் கோவிலில் பொது மக்கள் வழிபட்டு வந்திருந்தனர்.
கடந்த பத்து வருட காலமாக பட்டியலினத்தவர்களுக்கு கோயிலுக்குள் சென்று வழிபட விடாமல் உயர் சாதியை சேர்ந்த சிலர் தீண்டாமையை கடைபிடித்து வருகின்றனர். இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த மோதில் ராம், சின்னச்சாமி ராமசாமி ஆகியோர் தலைமையில் கோயில் செல்ல அனுமதி மறுத்து வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பாக பலமுறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் உரிய முடிவு எடுக்கப்படவில்லை. தொடர்ந்து எங்கள் சாதி மக்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் தீண்டாமையை கடைப்பிடித்து வருகின்றனர். இது சட்டவிரோதமானது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள உரிமையை மறுக்கக்கூடிய செயல். எனவே எங்களுக்கு எங்கள் சமூகத்தைச் சேர்ந்த மக்களை கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும்.