மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.திருநாவுக்கரசு, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்," மன்னர் ஆட்சி காலத்திலும், அதற்கு பிறகும் சாலையோரங்களில் இரு பக்கங்களிலும் மரங்கள் நட்டு பராமரிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த மரங்கள் நீண்ட தூரம் பயணம் செய்வோர் சிறிது நேரம் ஓய்வு எடுக்கவும், வெயில் மற்றும் மழைக்கு ஒதுங்கவும் பயனளித்து வந்தது.
பயணிகள் ஓய்வு எடுப்பதற்காக ஒன்று அல்லது 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு கல் மண்டபம் கட்டப்பட்டது. கல் மண்டபம் அருகே குளம் வெட்டி அதில் மழை நீரை தேக்கி பயணிகள், சாலையை பயன்படுத்துவோரின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. சாலையோர மரங்கள் வெயிலில் இருந்து மக்களை காப்பாற்றுவது மட்டும் இல்லாமல் இயற்கை பாதுகாப்புக்கும் பயன்பட்டது. சாலையோரங்களில் வேம்பு, புளிய மரங்கள் அதிகளவில் நடப்பட்டன. இந்த மரங்களை குத்தகைக்கு விடுவதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வருவாய் கிடைத்து வந்தது.
வாகனப்பெருக்கம் காரணமாக சாலைகள் 4 மற்றும் 6 வழிச்சாலையாக மாற்றப்படுவதால் சாலையோர மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. நாட்டின் வளர்ச்சிக்காக சாலை இணைப்பு மற்றும் விரிவாக்கப்பணி மேற்கொள்ள வேண்டியது அவசியமாக இருந்தாலும், வளர்ச்சிப்பணி என்ற பெயரில் மரங்களை அகற்றுவதை ஏற்க முடியாது.
சாலை விரிவாக்கப்பணிக்காக பலநூறு ஆண்டு பழமையான மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. சாலையோர மரங்கள் அகற்றப்படுவதால் பருவகாலம் மற்றும் சுற்றுச்சூழலில் பெரியளவில் மாறுதல் ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப்பணிக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. நத்தம் வழியாக மதுரை முதல் திண்டுக்கல் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்காக சாலையின் இரு பக்கங்களிலும் இருந்த நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. தற்போது இந்த வழித்தடம் பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.