மதுரை:திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் அர்ச்சகரான சீதாராமன் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "கோயில்களின் சிலைகளின் பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களினால் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய வருகின்ற பக்தர்களுக்கு இடையூறாக சில அர்ச்சகர்களும், செக்யூரிட்டிகளும் செல்போன்கள் மூலம் சாமிக்கு செய்யப்படும் அபிஷேகம், பூஜைகளை புகைப்படம் எடுத்தும், செல்ஃபி எடுத்தும் வருகின்றனர். எனவே கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்" எனக் கோரி இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பாக விவாதித்த வழக்கறிஞர், “அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்தப்படுகிறது. கோயில் சிலைகளுக்கு முன் நின்று செல்ஃபி எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிடுவது தொடர் கதையாகி வருகிறது. இதுமட்டுமல்லாமல் அந்த கோயிலில் அர்ச்சகர்களாக இருக்கக்கூடியவர்களே கோயிலுக்குள் செல்ஃபி எடுத்துக்கொண்டு தங்களின் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்” என்றார்.