தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போதைப்பொருள் கடத்தல் வாகனங்களின் நிலை என்ன? அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாடு முழுவதும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் நிலை என்ன என்பது குறித்து முழு விவரங்களையும் மூன்று மாதத்தில் தாக்கல் செய்ய தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு (DGP) உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

High Court Madurai branch directs to DGP file report on status of vehicles seized in drug smuggling cases
High Court Madurai branch directs to DGP file report on status of vehicles seized in drug smuggling cases

By

Published : Jul 5, 2023, 3:30 PM IST

மதுரை: திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த நாகூர் கனி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கஞ்சா கடத்தியதாக என் மீது 2018ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு, எனக்கு சொந்தமான ஜீப் வாகனம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் விசாரணை நீதிமன்றத்தில் உள்ள தனது வாகனத்தை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, தமிழ்நாடு அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.செந்தில்குமார் ஆஜராகி, 'மனுதாரர் வழக்கில் இரண்டாவது முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு போதைத் தடுப்பு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

வழக்கு நடைபெறும்போது விசாரணை நீதிமன்றத்தில் தான் தனது வாகனத்தை விடுவிக்கக்கோரி மனு தாக்கல் செய்ய முடியும். மேலும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்படி வாகனங்களை இடைக்காலமாக விடுவிக்க கோர முடியாது. எனவே, இது வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.

மேலும் போதைப் பொருள் கடத்தும் போது பறிமுதல் செய்யபட்ட வாகனங்கள் உரிய உரிமையாளர்கள் கேட்காமல் விசாரணை நீதிமன்றங்களிலும், காவல் நிலையங்களும் வாகனம் குவிந்து கிடக்கின்றது. பல ஆண்டுகளாக இதுபோல் வெயில், மழை அனைத்து காலங்களிலும் கேட்பாரின்றி கிடக்கிறது' என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி இளந்திரையன், மனுதாரரின் வாகனம் கஞ்சா கடத்திய போது சிறப்பு பிரிவு காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் விசாரணை நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும், கஞ்சா கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யக்கூடிய வாகனங்கள் மற்றும் சொத்துகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து போதைத் தடுப்புப் பிரிவு சட்டங்கள் மற்றும் உச்ச நீதிமன்றமும் பல்வேறு வழி முறைகளை பல வழக்குகளில் வழங்கி உள்ளது. இதனை விசாரணை நீதிமன்றம், விசாரணை அதிகாரிகள் முறையாகப் பின்பற்றுவது இல்லை. எனவே, இந்த வழக்கில் வாகனங்கள் பறிமுதல் செய்யும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை உத்தரவாக பிறப்பிப்பதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

  • போதை தடுப்புப் பிரிவு போலீசார் கடத்தலின்போது பறிமுதல் செய்யக்கூடிய வாகனங்கள் குறித்து உடனடியாக அதன் உரிமையாளருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • விசாரணை நீதிமன்றத்திற்குத் தகவல் தெரிவித்து வாகனத்தின் பதிவு எண், பதிவு சான்று உள்பட அனைத்து ஆவணங்களையும் புகைப்படங்களாக சமர்ப்பிக்க வேண்டும்.
  • வாகனம் பறிமுதல் செய்யப்பட்டவுடன் வழக்கு விவரம், வாகனத்தின் முழு விவரங்கள், உரிமையாளர், இன்சூரன்ஸ் உட்பட அனைத்து விவரங்களையும் பட்டியலிட்டு பதிவு செய்ய வேண்டும்.
  • விசாரணை நீதிமன்றத்தின் அனுமதியுடன் வாகனம் எங்கு நிறுத்தப்பட்டுள்ளது, அதன் விவரங்களையும், வாகன நம்பர், வாகனத்தை இன்ஜின் எண் ஆகியவற்றைப் புகைப்படம் எடுத்து பராமரிக்க வேண்டும்.
  • பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, போதை வஸ்துகளை உடனடியாக ரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி அதன் சான்று விவரங்களை பாதுகாக்க வேண்டும்.
  • ரசாயன பகுப்பாய்வு சான்றுகள் பெற்றவுடன் போதைப்பொருள் அகற்றல் குழுவிற்கு சான்றுகளையும் முழு விவரங்களையும் அனுப்பி போதைப் பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மேலும், வழக்கு விசாரணையின்போது வாகனத்தின் உரிமையாளர்கள் வாகனத்தை விடுவிக்கக்கோரி மனு தாக்கல் செய்தால் வழக்கின் தன்மையைப் பொறுத்து விசாரணை நீதிமன்றம் உரிய முடிவு எடுக்கலாம். பறிமுதல் செய்து வழக்கு விசாரணை காலம் முழுவதும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை போதைத் தடுப்பு சட்டப்பிரிவு சொல்கிறது.

என்பன உட்பட பல்வேறு வழிமுறைகளை வகுத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும், கஞ்சா போன்ற போதை வஸ்துகள் கடத்தப்பட்ட வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பல வாகனங்கள் இதுவரை யாரும் உரிமை கோரவில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். எனவே உரிமை கோரப்படாத அனைத்து வாகனங்களும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் கிடக்கின்றன.

எனவே, தமிழகத்தில் அந்தந்த மண்டலத்தில் உள்ள உரிமை கோரப்படாத வாகனங்கள் மற்றும் உரிமையாளர்கள் எடுத்த சென்ற வாகனங்கள் குறித்த முழு விவரங்களை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சேகரித்து, அதனை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி வழக்கு - 3 வது நீதிபதி நியமனம்

ABOUT THE AUTHOR

...view details