மதுரை: கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்த அமிர்தவல்லி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், தனது கணவர் கருப்பையா, கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி உயிரிழந்த நிலையில் தனது கணவருக்குச் சேர வேண்டிய பணப்பலன்கள் மற்றும் வாரிசு அடிப்படையில் பணி வழங்கக்கோரி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்திருந்ததாக தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரரின் கணவர் 427 நாள்கள் பணியாற்றி உள்ளார். எனவே கருப்பையாவை நிரந்தர பணியாளராகத்தான் கருத வேண்டும். ஆகவே அவருக்குச் சேர வேண்டிய பணப்பலன்களை வழங்கி வாரிசு அடிப்படையில் வேலை வழங்க 4 வாரக் காலத்தில் மனுதாரர் மனுவைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றாததால் தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததாகவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், ஏற்கனவே கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது இரண்டு நாள்களில் வாரிசு அடிப்படையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இதன் தொடர்ச்சியாக இந்த மனு இன்று நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.