மதுரை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை தலைமையிடமாக கொண்டு நியூ ரைஸ் ஆலயம் நிதி நிறுவனம் என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல்பட்டது. இதன் கீழ் பல்வேறு துணை நிறுவனங்களும் இயங்கின. மேலும் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்தால், அதிகளவில் லாபம் ஈட்டலாம் எனக் கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர். ரூ.300 கோடி வரை முதலீடுகள் வசூலித்து, முதிர்வுத் தொகையோ, லாபமோ தராமல் பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், பணமோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தை நடத்திய ராஜா, மாதவன் உள்ளிட்ட 49 பேர் மீது கடந்த 2022ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீசாரால் முக்கிய நபராகத் தேடப்படும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி எம்.தண்டபானி விசாரித்தார்.
இந்த வழக்கு இன்று(ஜன.10) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த நிறுவனத்தில் 2ஆயிரத்து 810 பேர் முதலீடு செய்து உள்ளதாகவும், மனுதாரர் அந்நிறுவனத்தில் இயக்குநராக இருந்து உள்ளார். நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளில் இவருக்கும் பங்கு உண்டு. 200 பேரிடம் இருந்து 8 கோடி ரூபாய் வரை வசூலித்து கொடுத்துள்ளார்" என வாதிட்டார்.