மதுரை:மதுரையைச் சுரேஷ் குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "2013 ஆம் ஆண்டு பெறப்பட்ட எனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பித்த போது காவல்துறையினர் என் மீது குற்ற வழக்கு இருப்பதாக தெரிவித்தனர். நசுருதீன் என்பவர் மீதான வழக்கில் எனக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்பட்டு இதுபோல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நசுருதீன் என்பவர் எனது பயண ஏஜெண்ட் மட்டுமே அவருக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆகவே எனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "மதுரை, திருச்சியில் 2019 பிப்.1 முதல் 2019 ஜூன் 30 வரை போலி ஆவணங்கள் மூலம் இலங்கை நபர்களுக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டது தொடர்பாக மதுரை கியூ பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் மீது குற்றமில்லை என்பது உறுதி ஆனதால் அவரது பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க உத்தரவிடப்படுகிறது.
மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தாக்கல் செய்த அறிக்கையில், போலி பாஸ்போர்ட் முறைகேடு தொடர்பாக 41 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மதுரையில் ஒரு காவல் நிலையத்தில் மட்டும் 54 போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காலக்கட்டத்தில் மதுரை மாநகர் காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் இருந்துள்ளார். இவர் நேரடியாக பொறுப்பாக மாட்டார். இவருக்கு கீழ் உள்ள அதிகாரிகள் தான் பொறுப்பாவர்.