தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஞ்ஞானி உயிரிழந்த வழக்கு: 8 வாரங்களுக்குள் முடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) விஞ்ஞானி, குளிக்க சென்ற போது உடலில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த வழக்கில் பூதப்பாண்டி காவல் ஆய்வாளர் 8 வாரங்களில் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai highcourt bench

By

Published : Oct 18, 2019, 11:22 PM IST

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியைச் சேர்ந்த அலோசியஸ் பிரான்சிஸ்கோ என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், "எனக்கும், எனது கணவருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. எனது கணவர் மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உந்து மையத்தில் விஞ்ஞானியாக பணியில் இருந்தார்.

ஜூலை 13ஆம் தேதியன்று எனது கணவர் தினேஷ், அவருடன் பணிபுரியும் நண்பர்களுடன் இசக்கி அம்மன் கோயில் அருகேயுள்ள, ஆனந்தன் கால்வாயில் குளிக்க சென்றார். அப்போது எனது கணவர் நீரில் மூழ்கிவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது , அவர் உடலில் பலத்த காயங்கள் இருந்தன.

அவரது உடலில் 7 இடங்களில் காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், எனது கணவர் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவருடன் குளிக்கச் சென்றவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கும்போது, எனது கணவர் மட்டும் உயிரிழந்திருப்பது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இச்சம்பவம் குறித்து பூதபாண்டிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆனால், விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. எனவே, எனது கணவரின் இறப்பு குறித்த விசாரணையை காவல் துறையின் வேறு அமைப்புக்கு மாற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், வழக்கு விசாரணையை பூதப்பாண்டி காவல் நிலைய ஆய்வாளர் இன்னும் எட்டு வாரங்களில் முடிக்கவும், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இவ்வழக்கு விசாரணையை கண்காணிக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details