சட்டவிரோதமாக மணல் குவாரி அமைத்து மண் அள்ளி வருவதை தடுக்கக்கோரி நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா தெற்கு கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சிவசங்கரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின்போது நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகரன், காவல் துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆஜராகி அறிக்கை தாக்கல்செய்தனர்.
அந்த அறிக்கையில், கடந்த 3 மாதத்திற்கு முன்பாக m-sand குவாரி அமைக்க அனுமதி பெற்று சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பல கோடி ரூபாய் அபராதம் விதித்து உள்ளதாகவும், இது சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் கூறினர்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் மாவட்ட ஆட்சியரும், காவல் துறை கண்காணிப்பாளரும் திணறினர்.
அதில், ''பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் அளவிற்கு மணல் கொள்ளை நடைபெற்று உள்ளது. இந்த அளவிற்கு மணல் கொள்ளை நடைபெறும் வரை மாவட்ட நிர்வாகம் என்ன செய்தது? பல்லாயிரக்கணக்கான டன் கணக்கில் மணல் கொள்ளை நடைபெற்றது தெளிவாகத் தெரிகிறது. இவ்வளவு மணல் கொள்ளை நடந்துள்ள சூழலில் கிராம நிர்வாக அலுவலர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காததற்கான காரணம் என்ன? எத்தனை டன் மணல் கொள்ளை போயிருக்கும்?
கனிம வளத்துறை, வருவாய்த் துறை, காவல் துறை, மாவட்ட அளவிலான உயர் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காததற்கான காரணம் என்ன? இந்த வழக்கில் எத்தனை லாரிகள் பறிமுதல்செய்யப்பட்டன? மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட எத்தனை பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன? லாரிகள், உபகரணங்கள் பறிமுதல் செய்யவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன?