தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தான்குளம் சம்பவத்தில் தடயங்களை அழிக்க வாய்ப்பு; இன்றே விசாரணையைத் தொடங்க சிபிசிஐடிக்கு உத்தரவு! - Sathankulam case deatils

மதுரை: சிபிஐ பல்வேறு அனுமதிகளைப் பெற்று சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பு தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளதால், இன்றே சிபிசிஐடி விசாரணையைத் தொடங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

சாத்தான்குளம் சம்பவம்  சாத்தான்குளம் வழக்கு விவரம்  உயர் நீதிமன்ற மதுரைக்கிளை  madras high court madurai branch  Sathankulam incident  Sathankulam incident cbcid investigate  Sathankulam case update  Sathankulam case deatils  Sathankulam lockup death
சாத்தான்குளம் சம்பவத்தில் தடயங்களை அழிக்க வாய்ப்பு: உயர் நீதிமன்றம் கருத்து

By

Published : Jun 30, 2020, 4:20 PM IST

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துவருகிறது. இந்நிலையில், நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்காத கூடுதல் டிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன், நீதித்துறை நடுவரை ஒருமையில் பேசிய மகாராஜன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாக்கல்செய்திருந்தது.

இவ்வழக்கு, நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மூவரும் நேரில் ஆஜராகினர். அவர்கள் தனித்தனியே வழக்கறிஞர்களை நியமித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள், ”சிபிஐ பல்வேறு அனுமதிகளைப் பெற்று விசாரணையைத் தொடங்குவதற்குள் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளன.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் பேட்டி

இவ்வழக்கை நீதிமன்றம் தாமதப்படுத்த விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கியுள்ளனர். ஆகவே, ஒரு நொடியைக் கூட வீணாக்கக் கூடாது. சிபிஐ விசாரணை தொடங்கும்வரை நெல்லைச் சரக டிஐஜி இந்த வழக்கு விசாரணையை ஏற்க இயலுமா அல்லது நெல்லை சிபிசிஐடி விசாரணையைக் கையில் எடுக்க இயலுமா என்பது குறித்து தகவல் பெற்று மதியத்திற்குள் தெரிவிக்க வேண்டும்” எனக் கூறினார்.

இந்நிலையில், நீதிபதிகள் முன்னிலையில் இவ்வழக்கு மதியம் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் நெல்லைச் சரக டிஐஜியை விசாரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், ”நெல்லைச் சரக டிஐஜி மூன்று மாவட்டங்களுக்குப் பொறுப்பேற்றுள்ளார். இந்தக் கரோனா தொற்று காலத்தில் அவருக்குப் பல்வேறு பணிகள் இருக்கும்.

அவரது பணிகளைத் தளர்வுசெய்து இந்தப் பணியை வழங்கினாலும், நோய்த் தொற்று காலத்தில் கூடுதல் சிரமமாகவே இருக்கும். எனவே, நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் இவ்வழக்கை விசாரிக்க வேண்டும். இன்றே விசாரணையைத் தொடங்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

மேலும், உடற்கூறாய்வு அறிக்கை, நீதித்துறை நடுவரின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், சாத்தான்குளம் சம்பவத்தில் காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க:சாத்தான்குளம் சிசிடிவி காட்சி: முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டவை பொய்!

ABOUT THE AUTHOR

...view details