மதுரை: சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்கு சட்டங்கள் மாறுதல் செய்யப்பட்டும், புதிதாக பல சட்டங்கள் இயற்றப்பட்டு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டும் குற்றங்கள் குறையவில்லை. பாலியல் தொல்லையினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்போது முன்வந்து புகார்கள் அளிக்கும் மனநிலைக்கு வந்துள்ளனர். பொதுவாக நீதிமன்றங்களில் வழக்குகளுக்கு விரைந்து தீர்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற புகார் வைக்கப்பட்டாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மீது விரைந்து தீர்ப்பு வழங்கப்படுகிறது.
அப்படி வழங்கப்படும் தீர்ப்புகளை எதிர்த்து குற்றவாளிகள் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்து வழக்குகளில் இருந்து தப்பி வெளிவந்து விடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அந்த வகையில் உயர் நீதி மன்ற மதுரைக்கிளையில் பாலியல் வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு பாராட்டைப் பெற்று வருகின்றது.
டெல்லியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 2018ல் கும்பகோணம் வங்கி பணிக்கு வந்தார். சென்னையில் இருந்து ரயில் மூலம் கும்பகோணம் வந்தவர் நள்ளிரவு என்பதால் ஓட்டலில் தங்குவதற்காக ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார். ஓட்டலில் இறக்கிவிடாமல் பாதி வழியில் அந்தப் பெண்ணை ஆட்டோ டிரைவர் இறக்கி விட்டுள்ளார்.
இதனால் சாலையில் நடந்து சென்ற அந்தப் பெண்ணை அவ்வழியாக டுவீலரில் வந்த வசந்தகுமார், தினேஷ் குமார் ஆகியோர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அவர்களது நண்பர்கள் புருஷோத்தமன், அன்பரசுவையும் வரவழைத்து பலாத்காரம் செய்ய வைத்துள்ளனர்.