தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேபிட் கருவிகள் வாங்குவது தொடர்பான வழக்கில் ஐசிஎம்ஆர் பதிலளிக்க உத்தரவு! - Indian Institute of Medical Research

மதுரை: நோய் எதிர்ப்புத் திறனைப் பரிசோதிக்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து ரேபிட் கருவிகளை வாங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

high court bench
high court bench

By

Published : Jul 16, 2020, 8:13 PM IST

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "தமிழ்நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்று பரவல் அதிகரித்துவருகிறது. தற்போதைய சூழலில் ஒவ்வொருவரையும் பரிசோதிப்பது அவசியம். ஆதலால் ரேபிட் கருவிகள் மூலம் அனைவரையும் பரிசோதித்து நோய் எதிர்ப்பு அளவை அளவீடு செய்ய வேண்டும்.

அதன் அடிப்படையில் நோய் எதிர்ப்பு குறைவாக உள்ளவர்களை பிசிஆர் (PCR) பரிசோதனைக்கு உட்படுத்தலாம். இவற்றைக் கருத்தில் கொண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அங்கீகரிக்கும் நிறுவனங்களிடமிருந்து ரேபிட் கருவிகளை வாங்கி, தனிநபரின் நோய் எதிர்ப்புத் திறனை பரிசோதிக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ரேபிட் கருவிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

அதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், ”கரோனா வைரஸ் தொற்றை உறுதிசெய்யும் முறையான பரிசோதனையாக பிசிஆர் சோதனைகளே உள்ளன. தமிழ்நாடு அரசின் சார்பாக 5 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தை வழக்கில் எதிர் மனுதாரராகச் சேர்த்து, வழக்கு தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசுத் தரப்பில் பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: சென்னையிலிருந்து மக்கள் சொந்த ஊர் திரும்பக் கோரிய வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details