தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விளையாட்டு மைதானத்தில் நூலகம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

கரூரில் உள்ள திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில், நூலகம் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரிய மனுவில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியது.

madurai high court
மதுரை உயர்நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 5:44 PM IST

மதுரை:கரூர் மாவட்டம் வெள்ளாளப்பட்டியை சேர்ந்த கவியரசு, திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில், நூலகம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இது தொடர்பாக அவர் தனது மனுவில், "கரூர் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் பழமை வாய்ந்த ராஜலிங்க மன்றத்தை இடித்துவிட்டு அந்த இடத்தில் புதிய நூலகத்திற்கான கட்டிடம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த மைதானம் கரூர் மாநகரில் மிகவும் பழமையான 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சிறிய மைதானம். அங்கு தான் ஆண்டுதோறும் இந்திய அளவிலும் மாநில அளவிலும் விளையாட்டுப் போட்டிகள், அரசு மற்றும் தனியார் பொருட்காட்சிகள், அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நடைபயிற்சி மற்றும் மாணவ மாணவிகள், விளையாட்டு வீரர்கள் விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மைதானத்தின் அருகிலேயே மாவட்ட மைய நூலகம் அமைந்துள்ள நிலையில், அதன் அருகில் மற்றொரு நூலகம் அமைப்பதற்கு பதிலாக அரசு கலைக் கல்லூரி எதிர்ப்புறம் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நூலகத்தை அமைத்தால் மாணவ மாணவிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.

எனவே மைதானத்தில், நூலகத்திற்கான கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தலைமை நீதிபதி விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணிகள் நடந்து வருகிறது என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி, கரூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் விளையாட்டு மைதானம் பொது மக்கள் பயண்பாட்டில் தான் உள்ளது. அதேபோல் அங்கு உள்ள ராஜலிங்கம் மன்றத்தை இடித்து விட்டு கட்டப்படும் நூலகமும் பொதுமக்கள் பயண்பாட்டிற்கு தான். தனி நபர்களுக்கு அல்ல, அரசிடம் உரிய அனுமதி பெற்று நூலக கட்டுமான பணியை தொடரலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க:"சட்டப்பேரவை செயலர் பணி நீட்டிப்பை ரத்து செய்க" - தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம்!

ABOUT THE AUTHOR

...view details