தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2ஆவது திருமணம் செய்தால் குற்ற வழக்குப்பதிவு! - illegal marriage

மதுரை: அரசுப்பணிகளில் இருப்போர் இரண்டாவது திருமணம் செய்ததாக புகார்கள் எழுந்தால், துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன் குற்ற வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு நிர்வாகத் துறை செயலருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

By

Published : Jul 26, 2019, 3:17 PM IST

மதுரையைச் சேர்ந்த தேன்மொழி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது கணவர் காவலராக பணியில் சேர்ந்து உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு முத்துலெட்சுமி என்பவருடன் திருமணம் நடைபெற்று மூன்று குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.

இதில் ஏற்பட்ட தகராறில் கணவர் மீது உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். சமரசத் தீர்வு மையம் மூலமாக, இரு குடும்பத்தையும் கவனித்துக் கொள்வதாக எனது கணவர் தெரிவித்தார். இந்நிலையில், 2011இல் அவர் இறந்தபிறகு, ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் எனக்கு வழங்கப்படவில்லை. ஆகவே அவற்றில் ஒரு பங்கை எனக்கும் வழங்க உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், 'காவல்துறையைச் சேர்ந்த ஒருவரின் இரண்டாம் திருமணம் தொடர்பான பிரச்னையை சமரசத் தீர்வு மையம் தீர்த்துவைத்தது அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் உள்ளது.

இது போன்ற பிரச்னைகள் தெரியவருகையில் உயர் அலுவலர்கள், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.

தமிழ்நாடு அரசு ஓய்வூதிய விதிப்படி குடும்ப ஓய்வூதியத்தை தனது மனைவிக்கு வழங்க பரிந்துரைக்கலாம். ஒரு முறை பதிவு செய்தபின் வேறு காரணங்களுக்காக இதில் மாற்றம் செய்ய இயலாது. ஆகையால் இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரின் கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுகிறது' என்றார்.

மேலும் நீதிபதி, தமிழ்நாடு நிர்வாகத் துறை செயலர், ஓய்வூதியத்திற்காக மனைவி பெயரை பரிந்துரைக்கும் ஆவணங்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும், இரண்டாவது திருமணம் செய்தது தொடர்பான புகார்கள் எழுந்தால், அந்த நபரின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், குற்ற வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் அதற்கான வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details