மதுரை: திருச்சி கொட்டப்பட்டில் உள்ள அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டு உள்ள தங்களை, அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து, சுதந்திரமாக வாழ உத்தரவிட வேண்டும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ராபர்ட் பயஸ், என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “நான் குற்றமற்றவன் என்ற போதிலும், அரசியல் காரணங்களுக்காக 10 ஜூன் 1991 அன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டேன்.
32 வருடங்கள் மிகுந்த வேதனையுடன் கழித்த பிறகு, நான் 11.11.2022 அன்று உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டேன். நான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், என்னை திருச்சியில் உள்ள கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் 12.11.2022 அன்று முதல் காவலில் வைத்து உள்ளனர்.
இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளேன். இங்கு இருப்பது சிறையை விட மோசமானது. எங்கள் அறையை விட்டு வெளியே வரவும், கைதிகளுடன் பழகவும் எங்களுக்கு அனுமதி இல்லை. இங்கு மாற்றப்பட்டதில் இருந்து சூரியனைப் பார்க்க முடியவில்லை.
சிறையில் இருந்த முந்தைய நாட்களில் இதே நிலையில் இருந்த நாங்கள், 32 வருட துன்பங்களுக்குப் பிறகு மீண்டு வந்துள்ளோம். தற்போதும் இதே அவல நிலை தொடர்ந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். எங்களை முகாமில் இருந்து விடுதலை செய்யுமாறு இலங்கை அகதிகள் முகாம் அதிகாரியிடம் கேட்டபோது, என்னை விடுவிக்க முடியாது எனவும், எங்களை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினர்.
நான் அங்கு சென்றால் நிச்சயமாக கொல்லப்படுவேன். எனவே, நான் இலங்கை செல்ல விரும்பவில்லை. தற்போது எனது மகனுக்கு திருமணமாகி நெதர்லாந்தில் மனைவி மற்றும் மகன் அடங்கிய குடும்பத்துடன் வசித்து வருகிறார். உண்மையில், என்னை அனுமதித்தால், நெதர்லாந்தில் என் மகன், மனைவி மற்றும் சகோதரியுடன் என் எஞ்சியிருக்கும் வாழ்க்கையை சுதந்திரமாக வாழ விரும்புகிறேன்.
எனவே, நான் திருச்சியில் உள்ள இலங்கை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், நெதர்லாந்து செல்வதற்காக தொடர்புடைய அதிகாரிகளின் முன் ஆஜராக முடியவில்லை. எனவே, என்னை திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க வேண்டும்.
சுமார் 1 வருடம் சுதந்திரமாக இருக்க அனுமதித்து , நான் நெதர்லாந்து அல்லது வேறு நாட்டிற்குச் செல்ல தொடர்புடைய அதிகாரிகளைச் சந்திக்கவும், வெளிநாடு செல்லவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறி உள்ளார்.
இதேபோல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ள ஜெயக்குமாரும், தன்னை அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து, சென்னையில் உள்ள தனது குடும்பத்தினருடன் வாழ அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுத் தாக்கல் செய்து உள்ளார். இந்த மனுக்கள் நீதிபதி சுவாமிநாதன் முன்பு இன்று (நவ.15) விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிங்க:அரசுப் பள்ளி வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு.. புதுக்கோட்டையில் நடந்தது என்ன?