ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தால் அது நாட்டுக்கு ஏற்பட்ட ஈடு செய்யமுடியாத இழப்பு போல கருதும் நாம், ஒரு தூய்மைப் பணியாளர் உயிரிழந்த செய்தியை, வெறுமனே ’விஷவாயு தாக்கி பலி’ என இயல்பாக வாசித்துக் கடக்கிறோம். இப்படி, மக்களைச் சிந்திக்க விடாத, சாதி முறையைக் கேள்வி எழுப்பாமல், கரோனா நெருக்கடியில் திடீரென ’தூய்மைப் பணியாளர்கள்’ என்று அடையாளப்படுத்தினால் எல்லாம் சமநிலை அடைந்துவிடுமா?
கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களின் சேவை மகத்தானது என இச்சமூகம் ஒருபுறம் கொண்டாடினாலும், மறுபுறம் அவர்களுக்கான அடிப்படை வசதிகளைக்கூட செய்துகொடுக்கத் தவறிவிடுகிறது. ஏனென்றால், இவர்கள்தானே என்ற அலட்சியம். சாதாரண நாள்களிலேயே மிகுந்த நெருக்கடியில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்குக் கரோனா காலகட்டம் மேலும் சவாலாக மாறியுள்ளது.
என்னென்ன சவால்கள்?
மனிதக் கழிவுகளைக் கையால் அகற்றத் தடையாக துப்புரவுப் பணியாளர்கள் சட்டம் 2013ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், வீட்டுக் கழிவுகளுடன் குழந்தைகளின் பேம்பர்ஸ் உள்ளிட்டவற்றைப் போடுவது, மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைத் தரம் பிரிக்காமல் ஒன்றாகக் கொடுப்பது, நாப்கின்கள், உயிரிழந்த விலங்குகளின் உடல், சில நேரங்களில் கேட்பாரற்றுக் கிடக்கும் அனாதைச் சடலங்களை அப்புறப்படுத்துவது என சாதாரண நாள்களிலேயே அவர்கள் பணி சிக்கலானது. அப்படியானால், கரோனா நெருக்கடியில் சொல்லவா வேண்டும், உயிருக்கு உத்தரவாதமில்லாத நாள்கள் இவை... இப்போது புரிகிறதா? தூய்மைப் பணியாளர்களை அரசு எங்கு வைத்துள்ளது, நாம் எங்கு வைத்திருக்கிறோம் என்று.
தமிழ்நாடு முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இவர்களில் ஐம்பதாயிரத்துக்கும் குறைவானவர்களே நிரந்தர ஊழியர்கள். இப்படி ஈடுபட்டுள்ள ஒப்பந்த பணியாளர்கள் தங்களுக்கும் ஒரு நாள் பணி நிரந்தரம் கிடைக்கும் என்றே நம்பி நாள்களைக் கடத்துகின்றனர். எதார்த்தமோ... அவர்களுக்குக் கடைசிவரை எவ்வித சலுகைகளும் கிடைப்பதில்லை. இதுகுறித்து சில தூய்மைப்பணியாளர்களிடம் பேசினோம்.
மதுரை வடக்கு மாசி வீதி 83ஆவது வார்டில் சகிக்க முடியாத துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கழிவுநீர்த் தொட்டியைச் சிறிதும் முகச்சுளிப்பின்றி திறந்து அடைப்பைச் சரிசெய்து கொண்டிருக்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். அவர்களில் ஒருவர்தான் நாச்சியப்பன். அவர் நம்மிடையே தனது அனுபவத்தைப் பகிர்கையில், “நாங்கள் செய்யத் தேவையில்லாத பணியையும் கூட இந்த கரோனா காலத்தில் செய்துவருகிறோம். கடந்த 14 ஆண்டுகளாக இந்தத் துறையில் பணியாற்றிவருகிறோம். சுகாதாரப் பணியாளர்களில் மிக மிக ஆபத்தான பணிகளைக் கொண்டவர்கள் நாங்கள்தான், ஆனால் போதுமான சம்பளம் கிடையாது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட வீடுகள் உள்ள பகுதிகளில் தகரத்தைக் கொண்டு தெருவை அடைப்பதும், அதனைத் தொடர்ந்து பராமரிப்பதும் தற்போது எங்களுடைய வேலையாகிவிட்டது. ஆனால், எங்களுக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் கிடையாது” என்கிறார் தோய்ந்த குரலில்.
பெரும்பாலும் ஒப்பந்த தொழிலாளர்கள்தான் தமிழ்நாடு முழுவதும் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாதாள சாக்கடைப் பணியாளர்கள், மலக்குழி தொடர்புடைய பணியாளர்கள் உள்பட 3 லட்சம் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 12 மாநகராட்சிகள், நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பேரூராட்சிகள், 180க்கும் மேற்பட்ட நகராட்சிகள், 12 ஆயிரத்து எழுநூறுக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இவர்கள் பணி செய்துவருகின்றனர். தற்போது கரோனா நெருக்கடியில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய தூய்மைப் பணியாளர் சரவணன், “உயிருக்கு ஆபத்து நேரக்கூடிய இப்பணிக்குத் தேவையான உபகரணங்கள் எவையும் எங்களுக்குக் கிடையாது. நாங்கள் ஒப்பந்த பணியாளர்கள்தான், அதற்காக எங்கள் உயிருக்கு மதிப்பில்லையா? கையுறை, முகக்கவசம், ரெஃப்ளக்டர் ஜாக்கெட் இவைதான் எங்களிடம் உள்ள உபகரணங்கள். இதுகுறித்துப் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், மதுரை மாநகராட்சி கவனம் செலுத்தவில்லை.
விஷவாயு தாக்கி உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்குக்கூட போதுமான நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை. எங்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தைக்கூட முறையாக வழங்க மறுக்கிறார்கள் என்பதுதான் எங்களை மேலும் துயரில் ஆழ்த்துகிறது.