மத்திய அரசு 2015ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து அறிவித்தது. ஆனால், தற்போது வரை இந்த மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் மட்டுமே நாட்டிச் சென்றுள்ளார்.
இதன் பின்னர் சாலை அமைப்பது, எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் அமைப்பது உள்ளிட்டப் பணிகள் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் வரும் ஜூலை ஜூலை 31ஆம் தேதிக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான வேலைகள் முடிந்துவிடும் என கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் கரோனா நோய் தொற்றிற்காக புதிதாக ஆயிரம் படுக்கை வசதிகளுடன் அமைய உள்ள தற்காலிக மருத்துவமனையை அமைச்சர் ஆர் பி உதயகுமார், கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன், மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், மதுரை அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் சங்குமணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதன் பின்னர் தமிழ்நாடு கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக முன்னாள் முதலமைச்சர் காலத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பின்பு எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஜூலை 3ஆம் தேதி இந்திய அரசு அரசாணையில் மதுரை எய்ம்ஸ் பற்றியான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் பேசிய காணொலி எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 224 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. கரோனா நோய்த்தொற்றின் காரணமாக சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் சிறிது தாமதம் ஏற்பட்டிருந்தாலும், தற்போது வருவாய்த்துறை மூலமாக வேகமாக வேலை நடைபெற்று வருகிறது. ஜப்பானிய நிறுவனமான ஜைக்கா (JIICA) நிறுவனத்திடமிருந்து நிதி பெறப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமையப்பெற்றாலும், இது தமிழ்நாட்டிற்கே மிகப்பெரிய மைல்கல்” என்றார்.
இதையடுத்து, கரோனா நோய் தொற்றினால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வழங்கப்படும் நிதியில் தாமதம் ஏற்படுமா என்ற கேள்விக்கு, “இணைச்செயலாளர் சுனில் சர்மாதான் இதன் மையப்புள்ளி. அவரிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தனியாக இயக்குனர் மத்திய அரசு குழு நியமித்துள்ளது. இதற்கான வேலைகள் தொடங்கப்பட உள்ளது. ஜூலை 31ஆம் தேதிக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திடுவதற்கான வேலைகளை செய்து வருகிறோம். நாங்களும் முதலமைச்சர் ஆணைக்கிணங்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்கிறோம். எய்ம்ஸ் மருத்துவமனை வேலைகள் வேகமாக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன” என்றார்.
இதையும் படிங்க: 'சென்னை முழுவதும் இன்று 558 மருத்துவ முகாம்கள் நடத்தத் திட்டம்' - சென்னை மாநகராட்சி!